168

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 தன்னுட் கூறிக்கொண்ட இப்பாடலில், மொழி என்ற ஒன்றே தேனாக உருவகம்
 செயயப்பட, கண், முகம் என்பன வாளா கூறப்பட்டமை காண்க.

    "ஒன்றின் உறுப்புப் பலவற்றி னுள்ளும்
     ஒன்றினை உருவகம் உரைப்பதுஏ காங்கம்."              - வ. உரை. 161 

    "ஒருபொருள் அவயவம் பலவி னுள்ளும்
     ஒன்றனை உருவகம் செய்துமற்று ஒன்றனை
     இயம்பாது அகற்றுவது ஏகாங்க மாகும்."               - மு. வீ. பொ. 30] 

அநேகாங்கவுருவகம்

     எண்ணிய அவயவம் எவையும் உருவகமாக் கண்ணுதல் செயயும் அநேகாங்க
 உருவகம் வருமாறு:

    "கைத்தளிரால், கொங்கை முகிழ்தாங்கிக் கண்என்னும்
     மைத்தடஞ்சேல் மைந்தர் மனம்கலங்க - வைத்ததுஓர்
     மின்உளதால் மேகம் மிசைஉளதால்; மற்றுஅதுவும்."
     என்உளதால்; நண்பா! இனி"

 என வரும்.

     [ஒரு பொருளின் உறுப்புக்கள் பலவற்றையும் உருவகம் செய்வது அநேகாங்க
 உருவகம். இதன்கண் உறுப்பியும் உருவகம் செய்யப்படும்.

     "கையாகிய தளிரினால் கொங்கையாகிய முகிழைத் தாங்கிக் கண்ணாகிய
 சேல்மீனால் இளையர் மனம் கலங்க, மேலே மேகத்தைத் தாங்கிய மின்னல் ஒன்று
 என் உள்ளத்தில் உள்ளது" - எனத் தலைவன் பாங்கற்கு உற்றது உரைத்த
 இப்பாடலில், கைத்தளிர், கொங்கை முகிழ், கண் என்னும் சேல், குழலாகிய மேகம்
 என்ற உறுப்புக்களும் தலைவியாகிய மின் என்ற உறுப்பியும் உருவகம் செய்யப்பட,
 மைந்தர் மனம், தலைவன் மனம் என்பன உருவகம் செய்யப்படாமல் விடப்பட்டதை
 நோக்குக. அவயவ உருவகததுள் உறுப்புக்களே உருவகம் செய்யப்படும்; இதன்கண்
 உறுப்பியும் உருவகம் செய்யப்படும் என வேறுபாடு காண்க.