உரைத்த இப்பாடலில், ஒருவர் என்ற அவயவி உருவகம் செய்யப்படாமல், புருவம், கண், அல்குல், மருங்குல் என்ற அவயவங்களே உருவகம் செய்யப்பட்டமை காண்க. இஃது உறுப்பு உருவகம் எனவும் பெயர்பெறும்.
"அவயவி ஒழிய அவயவந் தன்னை உருவகம் செய்வது
உறுப்புஉரு வகமே". - வீ. உரை. 160]
அவயவியுருவகம்
ஊற்றும் ஆர் அங்கியே உருவகம் ஆக ஆற்றல்சால் அவயவி உருவகம் வருமாறு:
"வார்புருவம் கூத்தாட, வாய்மழலை சோர்ந்து அசைய,
வேர்வுஅரும்பச், சேந்து விழிமதர்ப்ப, - மூரல்
அளிக்கும் தெரிவை வதனாம் புயத்தால்
களிக்கும், தவம்உடையேன் கண்"
என வரும்.
[ஒன்றன் உறுப்புக்களை உருவகம் செய்யாது அவ்வுறுப்பி ஒன்றனையே உருவகம் செய்வது அவயவி உருவகமாம்.
புருவம் கூத்தாட, வாய் மழலை பேச, வேர்வை அரும்ப, கடை சிவந்து விழிகள் செழிக்கப் புன்முறுவலை வழங்கும் இப்பெண்ணின் முகத்தாமரையால் நல்வினையுடையேனாகிய என் கண்கள் களிக்கின்றன - என்ற வாயில் நேர்விக்கப்பட்டுத் தலைவியை அணுகிய தலைவன் தன்நிலை கூறும் இப்பாடலில், அவயவியாகிய முகம் வதனாம்புயம் என உருவகம் செய்யப்படவும், அதன் உறுப்புக்களாகிய புருவம், வாய், விழி என்பன உருவகம் செய்யப்படாமை காண்க.
"இயையும் உறுப்பு ஒழித்து உறுப்புடைப் பொருளை
அமைய உரைத்தல் அவயவி ஆகும்" - வீ. உரை 160] |
|
|