விளக்கும் ஒளிவளர்த்து, வெம்மையால், எம்மைத்
துளக்கும் இயல்புஉடைத்தோ? சொல்"
என வரும்.
[ஒரு பொருளை உருவகம் செய்து பின் உருவகம் செய்வதற்கு உரிய பெற்றி அதன்கண் இல்லை என்று விலக்குவது விலக்கு உருவகமாம்..
இப்பெண்ணின் முகமாகிய மதிக்குச் சந்திரனுடைய தன்மை இல்லை. ஏனெனின், சந்திரன் இரவிலேயே ஒளிவிடும்; பகவில் ஒளி மழுங்கிக் காணப்படும்; குளிர்ச்சியால் எம்மை மகிழ்விக்கும். ஆனால், தலைவியின் முகமாகிய மதியம் பகலிலும் ஒளிவீசி வெம்மையால் எம்மைத் தளரச் செய்கிறது - என்று தலைவன் நயப்புரைக்கும் இப்பாடலிலி, வதனத்தை மதியாக உருவகம் செய்து பின் வதனத்திற்கு மதித்தன்மை இல்லை என விலக்கியவாறு காண்க.
இது தடைமொழி உருவகம் எனவும் பெயர் பெறும்.
"இணங்கிய பொருள்கள் இயையும் குணத்தை
விளங்க விளம்பும் தடைமொழி உருவகம்". - வீ. உரை. 161]
அவநுதி உருவகம் வருமாறு:
"பொங்குஅளகம் அல்ல புயலே இவை; இவையும்
கொங்கை இணைஅல்ல, கோங்குஅரும்பே; - மங்கை!நின்
மைஅரிக்கண் அல்ல, மதர்வண்டு இவை; இவையும்,
கைஅல்ல, காந்தள் மலர்"
என வரும்.
[உண்மையை மறுத்துப் பிறிது ஒன்றனை உரைத்தலாகிய அவநுதிக்கண் உருவகம் அமைத்தல் அவநுதி உருவகமாம்.
மங்கை! இவை மயிர் முடி அல்ல, மேகமே, இவை கொங்கையல்ல, கோங்கரும்பே, இவை கண் அல்ல, வண்டே, இவை கையல்ல, காந்தள் மலரே - என்ற தலைவன நயப்புரையில், உண்மையை மறுத்து உரைக்கும் அவநுதியோடு அளகம் அல்ல புயலே என்றாற்போல உருவகம் செய்யப்பட்டமை காண்க, |
|
|