இது தத்துவாபன உருவகம் எனவும் பெயர் பெறும்.
"உண்மைப் பொருள்மறுத்து ஓப்புமைப் பொருள்
மேல்தன்மைசெய் உருவகம் தத்துவா பனமே". - வீ. உரை. 160]
சிலேடை உரவகம் வருமாறு:
"உள்நெகிழ்ந்த செவ்வித்தாய்ப் பொற்றோட்டு
ஒளிவளரத் தண்ணளிசூழ்ந்து இன்பம் தரமலர்ந்து, - கண்ணெகிழ்ந்து
காதல் கரைஇறப்ப, ஆவி கடவாது,
அரிவை வதனாம் புயம்"
என வரும்.
[உருவகம் செய்யப்படும் இயல்பிற்குச் சிலேடைப் பொருளைக் கோடல் சிலேடை உருவகமாம்.
தலைவியின் முகமாகிய தாமரை - மன நெகிழ்ச்சியால் தோன்றிய புதுமை அழகு உடையதாய், காதில் அணிந்த பொற்றோடு ஒளி செய்ய, கருணைமிக்கு, எனக்கு இன்பம் தருமாறு மலர்ச்சிகொண்டு, கண்ணில் கருணை காட்டி, தனக்கு ஆசை கரை கடந்து வரினும் உள்ளத்தைக் கடவாது; தாமரை - உள் இதழ் மலர்ந்த பொலிவோடு, அவ்விதழ்கள் ஒளி செய்ய, வண்டுகள் சூழ்ந்து வர, அவற்றிற்கும் இன்பம் தரும் வகையில் மலர்ந்து, தேனை நெகிழச் செய்து, கண்டார் காமமுறக் குளத்தை விட்டு நீங்காது.
உள் நெகிழ்ந்த செவ்வி முதலியற்றைச் சிலேடையாகத் தாமரைக்கும் முகத்திற்கும் கொண்டு, முகத்தை வதனாம்புயம் என்று உருவகம் செய்துள்ளமை காண்க.
"நயம்படு சிறப்பின் நவைதீர் இருபொருட்கு
இயம்புதல் சிலேடை எனும்உருவகமே". - வீ. உரை 160]
இவ்விவரிகளேயன்றி மாறன் அலங்காரத்தில் மிகுதியாகக் கூறப்பட்டுள்ள ஒரு பொருள் உருவகம், பல பொருள் உருவகம், அவிருத்த உருவகம், என்பனவும், வீரசோழியம குறிப்பிடும் அவ்விய உருவகம், பண்புருவகம் என்பனவும் பிற்சேர்க்கையில் விளக்கப்பட்டுள்ளன.]
|
|
|