178

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "ஈண்டிய முற்றேக தேச உவமை உருவகமென்(று)
     உண்டொரு மூன்றா உருவகம் ஓதுவர்.....
     எல்லாம், வேண்டியவேண்டியவாறு விகற்பிப்ப மெல்லியலே."    - வீ. 177 

    "ஒழிறை உருவக முடனே உவமையும்
     மொழிவதற் கடங்கா முறைமைய ஆகலின்
     மொழியப் புகும்யான் மூதுணர்வு இலனால்
     இவற்றினுக் கிதனுள் இசைத்தவை ஓரீ இவரும்
     அவற்றையும் இவற்றின் அகப்பட உரைகொளீஇ
     முற்ற உணர்த்திய முறைமைய ஆக்குதல்
     கற்றோர் அறிவின் காட்சிய தாகும்."                        - மா. 122] 

    "ஏரி இரண்டும் சிறகா, எயில்வயிறாக்,
     கார்உடைய பீலி கடிகாவா, - நீர்வணணன்
     அத்தியூர் வாயா, அணிமயிலே போன்றதே,
     பொற்றேரான் கச்சிப் பொலிவு"

 என்பது இயைபு உருவகத்தின் பாற்படும் எனவும்,

     [சோழனுக்கு உடைமையாக அமைந்துள்ள காஞ்சிமா நகரின் தோற்றப் பொலிவை
 நோக்குமிடத்து, ஊருக்கு வெளியே இருபுறமும் அமைந்த ஏரிகள் இரண்டும்
 சிறகுகளாகவும், ஊர் நடுவில் அமைந்த கோட்டை வயிறாகவும், சோலைகள
 பீலிகளாகவும், திருமால் உகந்தருளியிருக்கும் திருவத்தியூர் என்ற பகுதி வாயாகவும்
 தோற்றம் வழங்குதலின் அந்நகரம் தோகை விரித்த மயில் போன்றுள்ளது - என்ற
 இப்பாடலில், காஞ்சிமா நகரம் மயில் போன்றது என்ற உவமை அணி வந்துள்ளது.
 அதனை மயிலோடு உவமை செய்வதற்கு ஏற்ப, அதன் ஏரிகள், கோட்டை, சோலை,
 திருக்கோயில் ஆகியவற்றை மயிலினுடைய சிறகு, வயிறு, பீலி, வாய் என்பனவாக
 உருவகம் செய்தற்கண் உள்ள தொடர்ந்த பொருள் இயைபு நோக்கி, இப்பாடலை
 இயைபு உருவகத்தின்பாற் படுத்தலாம். உவமையும் இருத்தலின், நேரே  இயைபு உருவகம் என்னாது இயைபு உருவகத்தின் பாற்படுத்தினர்.]