அணியியல் - உவமையும் உருவகமும்

181 

 கூறப்பட்டதனையே பின்னர் வேறெரு காரணம் பற்றி உபமானமாகக் கூறும் வேறுபாடு
 பற்றி இதனை விகார உவமையின்பாற்படுத்துவர்.

     முத்துக் கோத்தாற் போன்ற பற்கள், பற்களை ஒத்து மலரும் முல்லைக்கொடி
 போன்ற இடை, அதன்மேல் கார்மேகம் போன்ற மணங்கமழுங் கூந்தல் இவற்றை
 உடைய மெல்லியலார் செய்யும் கருணைக்கு ஒப்பு உளதோ? - என்று வாயில்
 நேர்விக்கப்பட்டுத் தலைவியைக் கூடி மகிழ்ந்த தலைவன் மகிழ்ந்து கூறும்
 இப்பாடலில் முத்துக் கோத்தன்ன முறுவல் என முறுவலை முதலில் உபமேயமாக்கி,
 அடுத்து முறுவலே ஒத்து அரும்பும் முல்லை என அம்முறுவலையே உபமானமாகக்
 கூறிய புதுமை விகாரஉவமையின் பாற்படுக்கப்பட்டவாறு.]

    "அடிநோக்கின் ஆழ்கடல் வண்ணன், அவன்தன்
     படிநோக்கின் பைங்கொன்றைத் தாரான், - முடிநோக்கித்
     தேர்வளவன் ஆகல் தெளிந்தேன்; தன் சென்னிமேல்,
     ஆர்அலங்கல் தோன்றிற்றுக் கண்டு"

 என்பது பலவயின்போலிஉவமையின் பாற்படும் எனவும்,

     [உவமைதோறும் உவமை உருபு வெளிப்பட்டு வருதல் பலவயிற்போலியாகவும்,
 அவ்வுருபு செய்யுள் விகாரத்தால் தொக்குவர அமைப்பது பலவயிற்
 போலியின்பாற்படும்.

 அடிநோக்கிய அளவில் திருமால் போலும் எனவும் மேனிநிறம் நோக்கிச்
 சிவபெருமான் போலும் எனவும் உட்கொண்டு, பின் முடி நோக்கி ஆத்தி
 மாலையைக் கண்டு அவன் சோழனே என்று தெளிந்தேன் - என்ற இப்பாடலில்,
 "அடிநோக்கின் ஆழ்கடல் வண்ணம் போலும்". "படிநோக்கின் பைங்கொன்றைத்
 தாரான் போலும்" என்ற தொடர்களில் போலும் என்ற உவமை உருபு தொக்குப்
 பொருள் தருதலின், இப்பாடல் பலவயிற் போலி உவமையின்பாற்பட்டது.]