அணியியல் - முன்னுரை

19 

 கொள்ளப்படும். வெளிப்படையாகக் கூறாது குறிப்பினாலோ தொழிலினாலோ
 நுணுகி உணரக் கூடிய தொழில் தன்மையைக் கூறும் அணி நுட்பஅணி ஆகும்.

     உள்ளத்துக் குறிப்பை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் தோன்றவும், அவற்றின்
 தோற்றத்துக்கு வேறொரு பொய்க்காரணத்தைக் கூறி உண்மைக் குறிப்பை மறைத்துக்
 கூறும் அணி இலேச அணி ஆகும். ஒன்றனை வெளிப்படையாகப் புகழ்வதுபோலக்
 குறிப்பால் பழிப்பதும், வெளிப்படையாகப் பழிப்பதுபோலக் குறிப்பால் புகழ்வதும்
 இவ்வணியின் பாற்படும் என்பாரும் உளர்.

     பெயரையும் வினையையும், உபமானத்தையும் உபமேயத்தையும், முடிக்கும்
 சொல்லையும் முடிக்கப்படும் சொல்லையும் முறையே அமைத்துக் கூறுவது முறை
 நிரல் நிறை அணியாம் ; மாற்றிக் கூறுவது எதிர் நிரல்நிறை அணியாம்.

     உள்ளத்து நிகழும் ஆர்வக் குறிப்பினைச் சொல்லால் வெளிப்படத் தெரிவிப்பது
 ஆர்வமொழி என்ற அணியாகும்.

     வீரம் அச்சம் வியப்பு இழிப்பு காமம் அவலம் கோபம் நகை என்ற எண் வகை
 மெய்ப்பாடுகளும் உள்ளத்துக் குறிப்பான் புறத்தே புலனாகும் செய்தியைக் கூறும்
 அணி சுவையணி ஆகும்.

     ஒருவன் தன்னைத்தானே தேவைப்பட்ட இடத்தில் மெய்ப்பாடு தோன்றப்
 புகழ்ந்து உரைப்பதனைக் கூறுவது தன் மேம்பாட்டுரை அணியாம்.

     ஒருவன் தான் கருதியதனை வெளிப்படக்கூறாது, தன்கருத்துப் புலனாகும்படி
 வேறு ஒருபொருளைக் குறிப்பிடுவது பரியாய அணியாம்.

      முன்பு தான் முயன்றதொரு தொழிலின் பயன் பிறிது ஒரு நிகழ்ச்சியால் எளிதின்
 கிட்டியதனைக் குறிப்பிடுவது சமாயித அணி ஆகும்.

     மேம்பட்ட செல்வ உயர்ச்சியையோ, மேம்பட்ட உள்ளக் கிளர்ச்சியின்
 உயர்ச்சியையோ உயர்த்திக் கூறுவது உதாத்த அணியாகும்.