இடம் துடித்தல் ஆடவருக்குத் தீநிமித்தமாம். படைப்பிலேயே துடிப்பு என்பது அமைந்த கிடத்தலின் துடித்தலைப் பண்பாகக் கூறினார். இப்பாடலில் "துடித்தன" என்று இடையில் அமைந்த பண்புச் சொல் மார்பு, தோள், விழி என்ற மூன்றனோடும் தனித்தனியே இணைந்தமை காண்க.
இடைநிலைத் தீவக அணி பொருள்கோளில் தாப்பிசை என்று பெயரிடப்பட்டுள்ளதும் நோக்குக.]
தொழில் இடைநிலைத்தீவகம் வருமாறு:
"எடுக்கும் சிலைநின்று எதிர்ந்தவரும், கேளும்,
வடுக்கொண்டு உரந்துணிய, வாளி - தொடுக்கும்
குடையும், திருவருளும், கோடாத செங்கோல்
நடையும், பெரும்புலவர் நா"
என வரும்.
[அரசன் எடுத்த வில்லிலே தன்னை எதிர்த்த பகைவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் தழும்புபட்டு மார்பு துணியப்படுமாறு அம்புகளைத் தொடுக்கும். அவனுடைய வெண்கொற்றக்குடை, அவன் செய்யும் சிறந்த அருள், அவனுடைய செங்கோல் ஆகியவற்றின் சிறப்பைப் புலவர்களுடைய நா பாடல்களில் தொடுக்கும்.
இப்பாடலில், தொடுக்கும் என்று இடையில் வந்த தொழிற்சொல் இரண்டிடத்தும் இயைந்து பொருள் தந்தவாறு காண்க.]
சாதி இடைநிலைத்தீவகம் வருமாறு:
"கரம்மருவு பொற்றொடியாம், காலில் கழலாம்,
பொருவுஇல் புயவலயம் ஆகும், - அரவு,அரைமேல்
நாணாம், அரற்கு நகைமணிசேர் தாழ்குழையாம்,
பூணாம், புனைமாலை யாம்"
|
|
|