அணியியல் - முன்னவிலக்கு அணி

211 

     [அண்ணலே! தலைமை கெடாதவண்ணம் நல்வழிக்கண் ஒழுகித் தேடும்
 பொருள்மேல் நாட்டம் கொண்டுள்ளாய், எங்களுக்கு எங்கள் ஆருயிர்மேல்
 ஆசையேயன்றி, அப்பொருளின் மேல் ஆசை சிறிதும் இல்லை, எம் கருத்தைக்
 கூறிவிட்டோம்; இனி, பொருள்வயின் பிரிந்து செல்லுவதோ, அப்பிரிவை விலக்கி
 இல்லத்திலேயே இருப்பதோ நின் விருப்பம் -

     என்ற தோழி கூற்றில், "எமக்கு உயிர்மேல் விருப்பமே அன்றிப் பொருள்மேல்
 விருப்பம் இன்று" - என்ற தொடர், பொருளால் எய்தும் பயனை இகழ்ந்து தலைவன்
 செலவை விலக்குதற்குப் பயன்பட்டவாறு காண்க.

     துணை செயல் விலக்கு வருமாறு:

    "விளைபொருள்மேல் அண்ணல்விரும்பினையேல், ஈண்டுஎம்
     கிளைஅழுகை கேட்பதற்கு முன்னம், - விளைதேன்
     புடைஊறு பூந்தார்ப் புனைகழலோய்! போக்கிற்கு,
     இடையூறு வாராமல் ஏகு"

 என வரும்.

     [தேன் துளிக்கும் மாலையினையும் வீரக் கழலையும் அணிந்த தலைவனே!
 நின் கருத்து முற்றுதற்குக் காரணமாகிய பொருள் கருதத் தலைவியைப் பிரிந்து
 செல்லக் கருதுவையேல், எம் உறவினருடைய அழுகைக் குரல் வெளியே கேட்பதன்
 முன், உன் பொருள்வயின் பிரிவிற்கு இடையூறு ஏற்படாத வகையில் விரையப்
 புறப்படுவாயாக -

     என்ற தோழி கூற்றில், "விரைந்து பிரிந்து செல்வாயாக" என்று தலைவன்
 போக்கிற்குத் துணை செய்வாளைப்போன்று, பிரிதல் துன்பம் தாங்காது தலைவி
 விரைவில் இறந்துவிடுவாளாதலின் உறவினருடைய அழுகை ஒலி கேட்கும் என்ற
 செய்தியையும் குறிப்பிட்டுச் செலவை விலக்கியவாறு காண்க.]