[உயிருக்கு உறுதிதரும் பொருளை விளைத்தற்குக் காரணமாகிய நன்முயற்சி
யாதும் செய்யவில்லை ; மேம்பட்ட தவத்திலேயே பொருந்தும் அறிவும் இல்லை,
சிவபெருமானுடைய பெருமையைச் சிறிதும் தியானம் செய்யாமல் என் வாழ்நாட்களை
வீணே கழித்து மூப்பு எய்திவிட்டேன் -
என்ற இப்பாடலில், பொருள் விளைவியாமலும், தவம் செய்யாமலும்,
இறைவனடியைச் சிந்தியாமலும் செயலற்ற தன்மை கூறி, வறிதே கழித்த காலத்தை இனி
மீட்க ஒண்ணாது என விலக்கியவாறு காண்க. கையறல் - செயலறவு. ]
உடன்படல்விலக்கு வருமாறு :
‘அப்போது அடுப்பது அறியேன் ; அருள்செய்த
இப்போது இவளும் இசைகின்றான் ; - தப்பில்
பொருளோ புகழோ தரப்போதிர் ! மாலை
இருளோ நிலவோ எழும்’
என வரும்.
[ குறைவற்ற பொருளையும் புகழையும் தேடிக்கொள்வதற்குத் தலைவியைப்பிரிந்து
செல்லும் தலைவனே ! நீ குறிப்பிடும் பிரிவிற்கு இப்பொழுது தலைவியும்
உடன்படுகின்றாள். ஆனால் நீ பிரிந்து செல்லும் இன்று மாலையே இருளும் நிலவும்
தோன்றும். அப்பொழுது தலைவியிடம் யாது வேறுபாடு நிகழும் என்பதை யான்
அறியேன். அவளை ஆற்றுவித்துக்கொண்டிருக்கும் ஆற்றல் எனக்கு இன்று -
என்ற தோழி கூற்றில், ‘இப்போது இவளும் இசைகின்றாள்’ என்ற உடன்படலும்
‘மாலை அடுப்பது அறியேன்’ என்ற விலக்கும் அமைந்தவாறு காண்க. ]
வெகுளிவிலக்கு வருமாறு :
‘வண்ணம் கரிய வளைசரிய, வாய்புலர,
எண்ணம் தளர்வேம் எதிர்நின்று, - கண்இன்றிப்
போதல் புரிந்து, பொருள்காதல் செய்வீரால் ;
யாதும் பயம்இலேம் யாம்’
என வரும்.
|
|
|