[ நிறம் மாறுபட, வளைகள் கழல, வாய்புலர, எதிர்காலத்து நன்மை கருதி
யாங்கள் திட்டமிட்ட எண்ணங்கள் எல்லாம் தளரச் செயலற்று இருக்கும் எங்கள் முன்,
எங்கள் நிலையைக் கண்டுகொண்டவாறே நின்று கண்ணோட்டம் இன்றி எங்களைப்
பிரிந்து பொருள் தேடுதலிலேயே அன்புற்று இருக்கின்றீர் ஆதலின், நீர் தேடிவரும்
பொருளால் எங்களுக்கு யாதொரு பயனும் நிகழாது -
என்ற தலைவி கூற்றில், ‘பொருளால் யாதும் பயம்இலேம் யாம்’ என்ற வெகுளிச்
சொற்கள் தலைவன் பிரிவை விலக்கியவாறு. ]
இரங்கல்விலக்கு வருமாறு :
‘ஊசல் தொழில்இழக்கும், ஓப்பு மயில்இழக்கும்,
வாசம் சுனைஇழக்கும் வள்ளலே ! - தேசு
பொழில்இழக்கும், நாளைஇப் பூங்குழலி நீங்க,
எழில்இழக்கும் ; அந்தோ இவண்’
என வரும்.
[ வள்ளலே ! நீ இன்று தலைவியைப் பிரிந்து புறப்பட்டால், நின் பிரிவைத்
தாங்காமல் நாளை இத்தலைவி இறந்து படுவாளாயின், ஊசல் தன்னை ஆட்டுவார்
இன்மையின் தொழிலை இழக்கும் ; மயில் தன் சாயலுக்கு ஒப்பாவாரை இழக்கும் ;
தலைவி நறுஞ்சுண்ணம் பூசி நீராடுதல் நிகழாமையின், சுனைநீரும் தன் நறுமணத்தை
இழக்கும் ; தலைவி வாராமையால் பொழிலும் ஒளியை இழக்கும் ; இவ்விடமே அழகை
இழக்கும் -
என்ற தோழி கூற்றில், ஊசல், மயில், சுனை, பொழில் முதலியவற்றின் நிலைக்கு
இரங்குவாள் போலத் தலைவன் பிரிவை விலக்கியவாறு. ]
|
|
|