218

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [நீதியால் மேம்பட்ட புகழை உடைய சோழனே! இவ்வுலகில் தாம்
 வறுமையுற்றவராய் நின்னைத் தம் வறுமையைத் தீர்த்துக் கோடற்குக் காணவருதலை
 விரும்பியவர் அனைவரும் தாம் விரும்பிய பொருள்களைத் தாங்களே எடுத்துச்
 செல்லும் வாய்ப்பினை நீ அருளியுள்ளாய். ஆதலின், நீ யாருக்கும் கொடுக்கின்றாய்
 என்று யாம் கருதகில்லேம் - என்ற இப்பாடலில், வறியாருக்கு வழங்குவதாகிய
 சோழனுடைய கொடை, அவன் தன் கைகளால் எடுத்து வழங்காமையால் கொடை
 ஆகாது எனக் காரணம் காட்டி விலக்கப்பட்டவாறு, காரணவிலக்கோடு இவ்விலக்கிடை
 வேறுபாடு காண்க. காரணவிலக்கு காரியம் நிகழ்வதற்குரிய காரணம் எதுவும்
 நிகழ்ந்திலது என்று கூறி விலக்குவது. ஏதுவிலக்கு ஒரு செயல் நிகழ்ச்சியைக் காரணம்
 காட்டி அச்செயல் நிகழ்கின்றிலது என விலக்குவது,]

     வேற்றுப்பொருள் வைப்பு முதலிய அலங்காரங்கள் மூன்றோடு முன்னவிலக்கு
 அலங்காரம் கூடிவருதல்பற்றி இவற்றைவேறு பிரித்து ஓதினார்.                 31 

வேற்றுப்பொருள் வைப்பணி - இலக்கணமும் விரிவும்

 651. முன்ஒன்று தொடங்கி மற்றுஅது முடித்தற்குப்
      பின்னர் ஒருபொருள் உலகுஅறி பெற்றியின்
      ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப்பொருள் வைப்பது
      முழுவதும் சேறல் ஒருவழிச் சேறல்
      முரணித் தோன்றல் சிலேடையின் முடித்தல்
      கூடா இயற்கை கூடும் இயற்கை
      இருமை இயற்கை விபரீதப் படுதல் என்று
      இனையஓர் எட்டின் இயல்பினது என்ப.

 நிறுத்தமுறையானே இது வேற்றுப்பொருள் வைப்பின் பொதுவிதியும் அதன்விரியும்
 கூறுகின்றது.