பிறர் துயரம் கண்டு முறுவலிப்பவர் கொடியவர் ஆதலின், "கொடியார்க்கும் உண்டோ குணம்" எனப்பட்டது. "கொடியார்" என்ற சொல் சிலேடை நயத்தால் கொடியோர்களையும், கொடிகளையும் உணர்த்தியவாறு,]
கூடா இயற்கை வருமாறு :
"ஆர வடமும், அதிசீத சந்தனமும்,
ஈர நிலவும் எரிவிரவும்; - பாரில்,
துதிவகையான் மேம்பட்ட துப்புரவும், தத்தம்
விதிவகையான் வேறு படும்"
என வரும்.
[குளிர்ந்த முத்துமாலையும், மிகவும் குளிர்ச்சியைத்தரும் சந்தனமும், குளிர்ந்த நிலவும் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு வெப்பத்தைத் தருகின்றன. இவ்வுலகில் புகழத்தக்க வகையினால் மேம்பட்ட நுகரும் பொருள்களும் தத்தமது ஆகூழ் போகூழ் நிலைகளுக்கு ஏற்பட மாறுபடும் - என்ற இப்பாடலில், "பாரில்.........வேறுபடும்" என்ற பொதுப் பொருளால் "ஆரவடமும் ........ விரவும்" என்ற சிறப்புப்பொருள் விளக்கப்பட்டவாறு. முத்து முதலியவற்றிற்கு வெப்பம் தருந்தன்மை அவற்றின் இயல்புக்கு மாறுபட்டதாதலின், இது கூடா இயற்கை ஆயிற்று.]
கூடும் இயற்கை வருமாறு:
"பொய்உரையா நண்பர் புனைதேர் நெறிநோக்கிக்
கைவளை சோர்ந்து, ஆவி கரைந்துஉகுவார், - மெய் வெதுப்பப்
பூத்தகையும், செங்காந்தள்; பொங்குஒலிநீர் ஞாலத்துத்
தீத்தகையார்க்கு ஈதே செயல்"
|
|
|