[பொய் என்பதனையே உரைத்துஅறியாத தலைவருடைய தேர் வரும் வழியை நோக்கியவாறே, கைகள் வளையல்கள் சோர உயிர் நைய வருந்தும் தலைவியரின் மெய் வெப்பமுறுமாறு செங்காந்தள் பூக்களை மலர்ந்து வெப்பத்தைச் சொரிகின்றது. கடல் சூழ்ந்த உலகில் கொடிய பண்புடையாருக்குப் பண்டே நலிந்திருப்பாரை மீண்டும் நலிவதே செயலாகும். "பொங்கொலி .......... செயல்" என்ற பொதுப்பொருளால் "பொய் உரையா .......... செங்காந்தள்" என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டவாறு, தீயவர்கள் எளியோரை நலிதல் இயற்கையாதலின், இது கூடும் இயற்கையாயிற்று. "தீத்தகையார்" என்ற தொடர் கொடியோரையும் தீப்போலும் நிறத்தை உடைய காந்தட் பூக்ளையும் குறிப்பதால், சிலேடையும் ஆயிற்று,]
இருமை இயற்கை வருமாறு:
"கோவலர்வாய் வேய்க்குழல் அன்றிக் குரைகடலும
கூவித் தமியோரைக் கொல்லுமால்; - பாவாய்!
பெரியோரும் பேணாது செய்வரே போலும்,
சிறியார் பிறர்க்குஇயற்றும் தீங்கு"
என வரும்.
[தோழி! இடையர்கள் வாயிலிருந்து வெளிப்படும் வேய்ங்குழல் ஓசையே அன்றிக் கடல்ஒலியும் தனித்திருப்பாரை நலிநின்றது. சிறியோர் பிறருக்கச் செய்யும் தீங்குகளைப் பெரியோரும் ஆராயாது செய்வார் போலும்- என்ற இப்பாடலில், "பெரியோரும்........தீங்கு" என்ற பொதுப்பொருளால், "கோவலர்.........கொல்லுமால்" என்ற சிறப்புப் பொருள் விளக்கப்பட்டவாறு, சிறியார் பிறருக்குத் தீங்கு இயற்றுதலும், கோவலர் வாய் வேய்ங்குழல் தமியோரைத் துன்புறுத்தலும் கூடும் இயற்கை; பெரியோர் பிறருக்குத் தீங்கு இயற்றுதலும், குரைகடல் தமியோரை நலிதலும் கூடாஇயற்கை என்க. எனவே இப்பாடலில் இருமை இயற்கையும் சொல்லப்பட்டவாறு.] |
|
|