இ-ள் : கூற்றினான் ஆதல் குறிப்பினான் ஆதல் ஒப்புமை உடையவாய் இருப்பன இரண்டுபொருள் தம்முள் வேறுபாடு தோன்ற வந்தால், அது வேற்றுமை என்னும் அலங்காரமாம்; அவ்வேறுபாடு குணம் முதலியவற்றால் கூடும் என்றவாறு.
"வேற்றுமைப்படவரின்" எனப் பொதுப்படக் கூறிய அதனால், அவை ஒரு பொருளானே வேற்றுமை செய்தலும் இருபொருளானே வேற்றுமை செய்தலும் அவ்வாறின்றி மிகுதிகுறைவுகளான் வேற்றுமை செய்தலும் கொள்க. [கூற்று - வெளிப்படை; குறிப்பு - மறைவாகத் தெரிவித்தல்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 46, 47
"ஒருமை இருமை சிலேடை உயர்பினொ டேதுவன்றிப்
பெருமை மலிசாதி ஒப்பாம் விதிரேகம் பேசுதொழில்
அருமை மலிகுணம் சாதியென் றாகுமவ் வேதுவுமற்று
இருமை நிகழ்ஞா பகங்கா ரகமாம் இலங்கிழையே." -வீ. 165
"ஒருபுடை இருபொருள் உரையினும் குறிப்பினும்
வெளிப்பட வேற்றுமைப் படுத்துதல் வேற்றுமை." - மா. 30
"அதுவே,ஒருபொருள் இருபொருள் சமம்உயர்ச் சியதெனும்
பொருள்பெறு மரபின் புலப்படும் என்ப." - மா. 131
"அதுவே,
பொருளா தியவாம் நான்கொடும் புணரும்" -மா, 132
"வேற்றுமை என்பமும் ஆற்றிய இருபொருள்
சாற்றிய உவமையில் வேற்றுமைப் படுத்தலே." -தொ. வி. 343
|
|
|