[பொற்றொடி! வில் ஏந்திச் சுற்றும் மன்மதனும் சோழ மன்னனாகிய போர் வெற்றியை உடைய கிள்ளியும் பிறவாற்றான் ஒத்தாராயினும் நிறத்தான் ஒவ்வார். திருமாலுடைய மகனாகிய மன்மதன் கருநிறத்தினன். உறையூர்ச் சோழன் மகனாகிய கிள்ளி செய்யன் - என்ற இப்பாடலில், பிறவற்றால் மன்மதனும் சோழனும் ஒப்பர் என்பதனைக் குறிப்பினால் அறிவித்து, இருவரும் நிறத்தால் வேறுபட்டவர் எனக் குண வேற்றுதமை சுட்டப்பட்டவாறு, நிறமும் பண்புள் அடங்கும் என்க. கரியன், செய்யன் என்பன பண்படியாக பிறந்த பெயராதலும் காண்க.]
பொருள் வேற்றுமை வருமாறு:
"ஓங்கல் இடைவந்து, உயர்ந்தோர் தொழவிளங்கி,
ஏங்குஒலிநீர் ஞாலத்து இருள்கடியும் - ஆங்குஅவற்றுள்,
மின்நேர் தனிஆழி வெங்கதிர், ஒன்று; ஏனையது,
தன்நேர் இலாத தமிழ்"
என வரும்.
[மலையில் தோன்றி, மேன்மக்கள் தொழுமாறு விளக்கமுற்றுக் கடல் சூழ்ந்த உலகில் இருள் கடிவன இரண்டு. அவற்றுள் ஒன்று ஒளி மிக்க ஒற்றைத்தேர்ச் சக்கரத்தை உடைய வெங்கதிர்; மற்றொன்று தன்னெதாப்பில்லாத தமிழ்.
தமிழ் பொதிலியல் தோன்றி, மேன்மக்கள் தொழுதேத்தும் சான்றோர் பாடலைக் கொண்டு, உலகில் அக இருளைப் போக்கும்; கதிர், உதய மலையில் தோன்றி, நன்மக்களான் வணங்கப்பட்டு, உலகில் புறவிருளைப் போக்கும்.
இப்பாடலில், ஒப்புமையான பண்புடையவனாகிய கதிர், தமிழ் என்ற இரண்டனையும் வேறுபடுத்திக் காட்டியவாறு காண்க.]
சாதிவேற்றுமை வருமாறு:
"வெங்கதிர்க்கும் செந்தீ விரிசுடர்க்கும் நீங்காது;
பொங்கும் மதிஒளிக்கும் போகாது; - தங்கும்
வளமையான் வந்த மனம்மயக்கம், மாந்தர்க்கு
இளமையான் வந்த இருள்" |
|
|