விபாவனை என்னாது "ஆகும்" என்றதனால், வினை எதிர்மறுத்துப் பொருள் புலப்படுப்பினும், பொது வகையான்காரணம் விலக்கிக் காரியம் புலப்படுப்பினும் இவ்வியல்பு அலங்காரம்ஆம் எனக்கொள்க. அவற்றுள்,
வினைஎதிர் மறுத்துப் பொருள் புலப்படுத்துதற்கு வரலாறு:
"பூட்டாத வில்குனித்துப் பொங்கும் முகில்எங்கும்
தீட்டாத அம்பு சிதறுமால்; - ஈட்டமாய்க்
காணாத கண்பரப்பும், தோகை; கடும்பழிக்கு
நாணாது அயர்ந்தார் நமர்"
என வரும்.
[நாண் பூட்டாத வில்லை வளைத்துக் கார்மேகக்குழாம் கூர்மை ஆக்கப்படாத அம்புகளைச் (மழைத்துளிகளை) சிதறத்தொடங்கி விட்டது. கூட்டம் கூட்டமாக மயில்கள் காணும் ஆற்றலற்ற தம்பீலிக்கண்களை விரித்து ஆடத்தொடங்கிவிட்டன. இக் கார் காலம் தலைவி உயிருக்கு ஏதம் தருமே" என்ற கடும்பழிக்கு நாணுதலின்றித் தலைவன் சென்ற வேற்றுப்புலத்திலேயே தங்கி விட்டான் - என்ற இப்பாடலில்,
வில்லை நாண் பூட்டாது வளைத்தல், தீட்டாத அம்பு சிதறுதல், காணாத கண்களைப் பரப்புதல் என்பன வில், அம்பு, கண் இவற்றின் வினைகளை மறுத்துரைப்பதன் வாயிலாக, இந்திரவில் - மழைத்துளி - பீலிக்கண் என்று கவி குறிப்பால் கூறக்கருதிய பொருளைப் புலப்படுத்தவாறு காண்க.]
காரணம் விலக்கிக்காரயம் புலப்படுப்பதற்கு வரலாறு:
"காரணம் இன்றி மலையாநிலம் கனலும்;
ஈரமதி வெதும்பதற்கு என்நிமித்தம்? - காரிகையார்க்கு
யாமே தளர, இயல்பாக நீண்டனகண்;
தாமே தீண்ட, தனம்"
|
|
|