250

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 கொங்கைகளுக்கும் அல்குலுக்கும் இடையே இடை இல்லை எனல் இயலாது :
 நிச்சயமான இடை உண்டு - என்ற இப்பாடலில், இடையைக் கட்புலனாகாத அளவு
 நுண்ணிதாகக் கற்பனை செய்து, கருதல் அளவையால் உண்டு என்று துணிந்த
 துணிவு அதிசயம் அமைந்தவாறு.]

     திரிவு அதிசயம் வருதாறு :

    "திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
     பைங்கிள்ளை பால்என்று வாய்மடுக்கும் ; -- அங்குஅயலே,
     காந்தர் முயக்குஒழிந்தார் கைவறிதே நீட்டுவரால் ;
     ஏந்திழையார், பூந்துகிலாம் என்று"

 என வரும். பிறவும் அன்ன.                                           (36) 

     [சந்திரனுடைய வெள்ளிய நிலாக்கதிர் வெள்ளிக்கிண்ணத்தில் பாய்ந்தனவாக,
 அக்கதிர்களின் ஒளியைப் பால் என்று திரிபாகக் கருதி அதனைப் பருகுதற்குப்
 பசிய கிளி கிண்ணத்தைச் சுவைக்கச் செல்லும். பக்கலில் தலைவருடைய கழுவுதலை
 நீக்கிக்கொண்ட மகளிர் சந்திரனுடைய வெள்ளியகிரணங்களைத் தம்
 வெண்டுகில்களாகக் கருதி, அத்துகில்களைப் பற்றுவதற்காகக் கைகளை நீட்டுவார்கள்
 என்ற இப்பாடலில், நிலாக்கதிர் பாலாகவும் வெண்துகிலாகவும்  திரியக்கொள்ளும்
 அளவிற்கு உயர்வு நவிற்சி சொல்லப்பட்டவை திரிவு அதிசயமாகும்.

     இவ்வதிசயஅணி -- இடம், சினை, காலம் முதலியவற்றோடும் வரும் என்பதை
 மாறன் அலங்காலம் எடுத்துக்காட்டுப் பாடல்களோடு சுட்டுகிறது.- மா. 145]      36

தற்குறிப்பேற்றவணி

 656. பெயர்பொருள் அல்பொருள் எனஇருபொருளினும்
      இயல்பின விளைதிறன் அன்றிப் பிறிதுஒன்று
      தான்குறித்து ஏற்றல் தற்குறிப்பு ஏற்றம்;
      அதுவே,
      அன்ன போல்எனும் அவைமுத லாகிய
      சொல்நிலை விளங்கும் தோற்றமும் உடைத்தே.