262

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     ["போரிடும் வாளினை வென்ற கண்களை உடைய தலைவியே! கார் காலத்தில்
 மலரும் முல்லைப் பூக்களை நின் கூந்தலின்மேல் அலங்கரிப்பதற்கு வெற்றி
 வீரராகிய நம் தலைவர் வாராது அமையார். ஆதலின் என் நெற்றியில் பரவியுள்ள
 பசலை நாளையே நீங்கிவிடும்" என்று கார்கால வரவின்கண் ஆற்றாளாய
 தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கும் இப்பாடலில், தலைவன் வாராமை இல்லை என்ற
 காரணத்தால் தலைவியின் பசலை நீங்கிவிடும் என்பது விளக்கப்பட்டவாறு. இன்மையது
 அபாவம் - இல்லாமையினுடைய இல்லாமை. அஃதாவது உண்மை. வாராமை இல்லை
 என்ற இரண்டு மறைச்சொற்கள்  வருவார் என்ற பொருள்தருதல் இன்மையது
 அபாவமாதல் காண்க.]

     ஒன்றின் ஒன்று அபாவஏது வருமாறு :

    "பொய்ம்மை உடன்புணரார் மேலவர் ; பொய்ம்மையும்
     மெய்ம்மைசூழ் மேலாரை மேவாவாம் ; -- இம்முறையால்
     பூஅலரும் தாரார் பிரிந்தால், பொலங்குழையார்
     காவலர்சொல் போற்றல் கடன்"

 என வரும்.

     [மேன்மக்கள் பொய்மொழியோடு கலவார். பொய்மொழியும் உண்மையையே
 கருதும் சான்றோர் மாட்டு அணுகாது. இம்முறையால், பூமாலை அணிந்த தலைவன்
 பிரிந்து செல்வானாயின் தன் உயிர்காவலனாகிய தலைவன் கூற்று என்றும் பொய்க்காது
 என்ற தெளிவோடு ஆற்றி இல்லிருந்து நல்லறம் செய்தலே உரிமை மகளாகிய
 தலைவியின் கடனாகும். என்ற இப்பாடலில், சான்றோர் பொய்மை அணுகார் ;
 பொய்யும் சான்றோரை அணுகாது என்ற ஒருபொருளின்கண் ஒருபொருள்
 இல்லாமையைக் காரணமாகக்கொண்டு தோழி தலைவியை ஆற்றுவித்தவாறு.

     ஒருபொருளின்கண் ஒன்று இல்லாமை - பொய் சான்றோரிடம் இராது;
 சான்றோரும் பொய்யினிடம் இரார் என்பது.]