266

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [தம்மைக் காத்தற்றொழிலை மேற்கொண்ட தலைவர் பிரிகையினாலே,
 தனித்திருக்கும் பண்டு பூமாலை சூடிய பெண்களுக்கு, மன்மதனுடைய அம்புகள்
 தைக்குமே என்று மெல்லிய மார்பகம் புண்மிக்கன, மாலைக்காலம் வந்துவிடுமே
 என்று மனம்  இருண்டது - என்ற இப்பாடலில், மன்மதன் அம்பு எய்தல்,
 மாலைக்காலம் வருதல் ஆகிய காரணங்களுக்கு முன்பே, மெல் ஆகம் புண்கூர்தல்,
 மனம் இருளுதல் ஆகிய காரியங்கள் நிகழ்ந்தவாறு காண்க.]

     உயுத்த ஏது வருமாறு :

    "பொன்னி வளநாடன் கைவேல் பொழிநிலவான்,
     முன்னர் அசைந்து முகுளிக்கும், -- தன்நேர்
     பொரவந்த வேந்தர் புனைகடகச் செங்கை
     அரவிந்தம் நூறா யிரம்"

 என வரும்.

     [சோழ மன்னன் கையிலேந்திய வேல் வெளிப்படுத்திய நிலவினாலே,
 அவனுக்கு ஒப்பாகக் கருதிப் போரிடற்கு வந்த பகை மன்னருடைய கடகங்கள்
 அணிந்த கைகளாகிய தாமரைகள் பலவும் அவனை வணங்குவதற்காகக்
 குவிந்துவிடும் - என்ற இப்பாடலில்,

     நிலவின் ஒளியினால் தாமரை மூடிக்கொள்ளுதலாகிய பொருத்தமாகிய
 உலகியல் செய்தியை அடிப்படையாகக் கொண்டு காரணம் கற்பிக்கப்பட்டவாறு
 காண்க.

     யுத்தம் -- பொருத்தமானது.]

     அயுத்த ஏது வருமாறு :

    "இகல்மதம்மால் யானை அநபாயன் எங்கோன்
     முகம்மதியின் மூரல் -- அகம்மலர்வ,
     செங்கயற்கண் நல்லார் திருமருவு வாள்வதன
     பங்கயங்கள் சாலப் பல"

 என வரும்.