அணியியல் - ஏதுவணி

267 

     [மாறுபாட்டினை உடைய மதம்மிக்க பெரிய யானையை உடைய அநபாயனாகிய
 எம் அரசனுடைய முகமாகிய சந்திரனில் இருந்து வெளிப்படும் புன்சிரிப்பாகிய
 நிலாவினாலே, பெண்களுடைய அழகு பொருந்திய முகங்களாகிய் தாமரைகள்
 மலர்கின்றன - என்ற இப்பாடலில்.]

     உலகியல், நிகழ்ச்சிக்குப் பொருத்தமல்லாத - நிலாவெளியினாலே தாமரைகள்
 மலரும் - என்ற செய்தி குறிப்பிடப்பட்டு இருத்தல் அயுத்த ஏதுவாம்.

     அயுத்தம் -- பொருத்தமில்லாதது. காரணத்திற்கு ஏலாத காரியம் நிகழ்வது.
 அஃதாவது நிலவொளியால் கூம்பும் தாமரையை நிலவொளியால்
 மலரும் என்பது.]

     "முடியும் என்னாது இயலும்" என்றதனால், பிறவாற்றான் வருவனவும் கொள்க.
 அவற்றுள் ஐயஏது வருமாறு :

    "மாதர் உமைவாய் மழலை மொழியானோ?
     ஓதும் மறையின் ஓலியானோ ! -- யாதானோ?
     கோலம் இருதிறனாக் கொண்டான் திருமிடற்றின்
     ஆலம், அமிர்தான வாறு"

 என வரும். பிறவும் வத்துழிக் காண்க.                                   (40) 

     [ஆணும் பெண்ணுமாய் அம்மையப்பன் திருக்கோலத்திலிருக்கும் சிவபெருமான்
 கழுத்துவரை உட்புகுந்த ஆலகால விடம் அமுதமாக மாறியதற்குக் காரணம்
 உமாதேவியின் மழலைச் சொற்களா? அல்லது சிவபெருமான் ஓதும் வேத ஒலியின்
 மகிமையா? யாதாக இருக்கலாம்? - என்ற இப்பாடலில்,

     மழலை மொழியாலோ? மறை ஒலியாலோ? யாதாலோ என்று ஆலம்
 அமிர்தானதற்கு ஏது இன்னது என்று வரையறுக்கப்படாமல் ஐயநிலையிலேயே
 உரைக்கப்பட்டமையின் இஃது ஐய ஏதுவாதல் காண்க.]                       40