272

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     "கல்உயர்தோள் கிள்ளி பரிதொழுது, கண்பணிசோர்
     மெல்லியலார், தோழியர்முன் வேறுஒன்று -- சொல்லுவரால்,
     பொங்கும் படைபரப்ப, மீதுஎழுந்த பூந்துகள்சேர்ந்து,
     எம்கண் கலுந்தனவால் என்று"

 எனவும்,

     [மலைபோன்ற உயர்ந்த தோள்களை உடைய சோழ மன்னனை அவன்
 இவர்ந்து வந்து குதிரையோடு தொழுது அவனிடத்துக் கொண்ட வேட்கை
 நிறைவேறாமையாலே கண்களில் நீர்தளும்ப நின்ற மகளிர், அரசனுடைய
 பலவாகிய படைகள் செல்லுகையினாலே மேலே புறப்பட்ட தூசிபட்டுத் தம்
 கண்கள் கலங்கியவாகத் தோழியரிடம் குறிப்பிட்டனர் -- என்ற இப்பாடலில்.

     தம் உள்ளத்து வேட்கையைக் கண்ணீர்அரும்பல் வெளிப்படுத்திற்றாக, அதன்
 உண்மைக் காரணத்தை மறைத்துத் தூசிபட்டமையால் கண்கள் கலங்கி நீர்
 உகுத்தன எனப் பிறிதொரு காரணம் காட்டி உரையாடியவாறு காண்க.]

     "மதுப்பொழிதார் மன்னவனை மாங்கரிமேல் கண்ட
     விதிர்ப்பும் மயிர்அரும்பு மெய்யும் -- புதைத்தாள்,
     வளவா ரணநெடுங்கை நுண்துவலை வாய்ந்த
     இளவாடை சேர்ந்தது என"

 எனவும் வரும். பிறவும் வந்துழிக் காண்க.

(42) 

     [தேன் துளிக்கும் மாலையை அணிந்த மன்னவன் யானைமேல் இவர்ந்து வரக்
 கண்டமையாலே ஏற்பட்ட காம நடுக்கமும் உடம்பில் மயிர்க்கூச்செறிவும் பற்றி,
 வளமான யானையின் துதிக்கையில் இருந்து புறப்பட்ட திவலையோடு வாடைக்காற்று
 சேர்ந்து வீசியதால் நடுக்கமும் மயிர்க் கூச்செறிவும் ஏற்பட்டனவாகக் கூறித் தலைவி
 மறைத்தாள் - என்ற இப்பாடலில்,

     அரசனிடத்துத் தனக்கு ஏற்பட்ட காமத்தால் நிகழ்ந்த மெய்ப்பாட்டிற்கு,
 யானையின் துதிக்கையிலிருந்து வெளிப்பட்ட நீர்த்திவலையோடு கூடிய வாடைக்
 காற்றின் தாக்குதலைக் காரணமாகக் காட்டி மறைத்த திறம் காண்க.]

42