"வடிவங்கண் ணோக்கு வெறுப்புமுன் னானடிவ யாலுமுண்டா
யிடும்விருப் பேமுத லாஞ்சுவை அங்க மென்னவரப்
படுமது வேசுவை யென்பார்." - குவ. அ. 101]
வீரச்சுவை வருமாறு:
"சேர்ந்த புறவின் நிறை, தன் திருமேனி
ஈர்ந்திட்டு, உயர்துலைதான் ஏறினான் ; -- நேர்ந்த
கொடைவீர மோ, மெய் நிறைகுறையா வன்கண்
படைவீர மோ, சென்னி பண்பு?"
என வரும்.
[தன்னை அடைக்கலமாக வந்து அடைந்த புறவினைக் காப்பதற்காக அதன் நிறை அளவிற்குத் தன் உடல் உறுப்புக்களை அறுத்துக் கொடுத்ததோடு தானும் துலாத்தட்டில் ஏறிய சிபி மன்னனுடைய பண்பு கொடை வீரமோ? தன் நிறை கறையாமைக்குக் காரணமான தறுகண்மையை உடைய படை வீரமே? - என்ற இப்பாடலில், சிபி மன்னன் தன் உடலைத் தானே அரிந்து கொடுத்தற்கேற்ற தறுகண்மையும், புறாவுக்காகத் தன்னையே கொடுக்கக்கூடிய கொடையும் உடையனாய்,
"கல்வி தறுகண் இசைமை கொடைஎனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே" - தொ. மெ. 9
என்று மெய்ப்பாட்டியல் கூறும் வீரத்து நிலைக்களம் நான்கனுள் தறுகண், கொடை என்ற நிலைக்களன் காரணமாகத் தன் வீரத்தை வெளியிட்டவாறு.]
அச்சச் சுவை வருமாறு :
"கைஞ்ஞெரித்து, வெய்துயிர்த்து, கால்தளர்ந்து, மெய்பனிப்ப
மையரிக்கண் நீர்ததும்ப, வாய்புலர்ந்தாள் -- தையல்
சினவேல் விடலையால், கைஇழந்த செங்கண்
புனவேழம் மேல்வந்த போது"
|
|
|