284

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 இரு நிலையும் ஒரே தன்மையவாய் உள்ளன - என்ற இப்பாடலில், நுதல் வியர்த்தல்
 முதலிய காமச் சுவைக்குரிய மெய்ப்பாடுகள் சுட்டப்பட்டமை காண்க.

    "செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென
     அல்லல் நீத்த உவகை நான்கே"                        - தொ. மெ. 11 

 என்ற காமத்திற்குரிய நிலைக்களன்கள் நான்கனுள், புணர்வு நிலைக்களனாகக் காமம்
 பிறந்தவாறு காண்க.]

     அவலச்சுவை வருமாறு :

    "கழல்சேர்ந்த தாள்விடலை, காதலிமெய் தீண்டும்
     அழல்சேர்ந்து தன்நெஞ்சு அயர்ந்தான், -- "குழல்சேர்ந்த
     தாமம் தரியாது அசையும் தளிர்மேனி
     ஈமம் தரிக்குமோ"? என்று?

 என வரும்.

     [காலில் வீரக்கழர் அணிந்த காளைப்பருவத்தானாகிய தலைவன் இறந்த தன்
 காதலியின் உடலைத் தீயிலிட்டு அவள் உடலைத் தீத்தீண்டிய அளவில் "தலையில்
 வைத்த மாலையின் பாரம் தாங்காமல் அசையும் தளிர்போன்ற இவள் உடல்
 ஈமப்புறங்காட்டுத் தீயைத் தாங்குமோ" என்று தன் மனத் தளர்ந்தான் -- என்ற
 இப்பாடலில், தலைவியின் இறத்தல் காரணமாகத் தலைவற்கு அவலம்
 பிறந்தவாறு.

    "இளிவே இழவே அசைவே வறுமைஎன
     விளிவில் கொள்கை அழுகை நான்கே"                  - தொ. மெ. 5 

 என்ற அவலத்தின் நிலைக்களன்கள் நான்கனுள் இழவு பற்றி அவலம் பிறந்தவாறு
 காண்க.]

     உருத்திரச்சுவை வருமாறு :

    "கைபிசையா, வாய்மடியா, கண்சிவா, வெய்துஉயிரா,
     மெய்பனியா, வேரா, வெகுண்டெழுந்தான், -- வெய்யபோர்த்
     தார்வேய்ந்த தோளான், மகளைத் தருகென்று
     போர்வேந்தன் தூதுஇசைத்த போது"

 என வரும்.