292

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "உதாத்தம் பொருளில் பதார்த்தம் மிகலே."               - தொ. வி. 355 

    "ஆக்கத் துயர்வும் அகத்தின துயர்வும்
     மிகுதி யாக விளம்புவது உதாத்தம்"                   - மு. வி. பொ. 92 

    "செல்வ மிகுதியை ஆதல் செப்புறும்
     அருங்கதை புகழ்பொருட்டு அங்கமா யாதல்
     கூறுவது வீறு கோள்அணி என்ப."                            - ச. 121 

    "தங்கும் நிறைவின் வரலாற்றை மேற்சரி தம்புகழ்தற்கு
     அங்கம் உறலைச் சொலல்வீநு கோளணி."               - கு. வ. அ. 95 

     [இஃது உதாரதை எனவும் வீறுகோளணி எனவும் கூறப்படும்.]

     செல்வமிகுதி வருமாறு :

    "கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,
     என்றும் வறியோர் இனம்கவர்ந்தும், -- ஒன்றும்
     அறிவுஅரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம
     செறிகதிர்வேல் சென்னி திரு"

 என வரும்.

     [ஒளிவீசும் வேலை ஏந்திய சோழ மன்னனுடைய செல்வம், தன்னை எதிர்த்த
 வலிய வேந்தர்களுடைய செல்வம் பலவற்றையும் கவர்ந்து வருவதால் பெருகியும்,
 நாடோறும் இரவலர் கூட்டம் பரிசு பெற்றுச் செல்வதால் சுருங்கியும், வரவும் செலவும்
 இன்ன இன்ன என்று அறியமுடியாத இயல்பினதாய் உள்ளது -- என்ற இப்பாடலில்,
 சோழனுடைய வீரச் செல்வமும், கொடைச்  செல்வமும் மிகுத்துக் கூறப்பட்டவாறு
 காண்க.]

     உள்ளமிகுதி வருமாறு :

    "மண்அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,
     பண்ணும் தவத்துஇயைந்த பார்த்தன்தான், -- எண்இறந்த
     மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர் குலம்தொலைத்தான்,
     கோதண்ட மேதுணையாக் கொண்டு"

 என வரும். பிறவும் அன்ன.                                           (50)