296

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     பொருள் அவநுதி வருமாறு :

    "நிலனும், விசும்பாம், நிமர்கால்நீர், தீயாம்
     அலர்கதிராம், வான்மதியாம், அன்றி -- மலர்கொன்றை
     ஒண்நறுந் தாரான் ஒருவன், உயிர்க்குஉயிராம்,
     எண்இறந்த எப்பொருளும் ஆம்"

 என வரும்.

     [கொன்றை மாலையை அணிந்த சிவபெருமான் நிலமாகவும், விசும்பாகவும்,
 காற்றாகவும், தீயாகவும், கதிரோனாகவும், மதியமாகவும், உயிர்க்கு உயிராகவும்,
 எல்லையற்ற எல்லாப் பொருளாகவும் உள்ளான் - என்ற இப்பாடலில்,

     சிவபெருமான் தனிப்பட்ட ஒருவன் என்ற கருத்தை மறுத்து அவன் எல்லாப்
 பொருளுக்கும் உள்ளும் புறமுமாக உள்ளான் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளமை
 பொருள் ஒழிப்பணியாதல் காண்க.]

     குண அவநுதி வருமாறு :

    "மனுப்புவிமேல் வாழ மறைவளர்க்கும், ஆரப்
     பனித்தொடையல் பார்த்திபர்கோன் எங்கோன் - தனிக்கவிகை,
     தண்மை நிழற்றன்று ; தன்தொழுத பேதையர்க்கு
     வெம்மை நிழற்றாய் விடும்"

 என வரும். பிறவும் அன்ன.

     [நீதி உலகில் சிறப்புற்றிருக்க வேத நெறியைத் தழைத்து ஓங்கச் செய்யும்
 ஆத்திப்பூ மாலையின் அணிந்த மன்னர் மன்னனாகிய எம் சோழனுடைய
 வெண்கொற்றக் குடை, அவன் வீதியில் திருவுலாப்போந்த காவை அவனைத்
 தொழுத மகளிருக்கு வெப்பம்தரும் நிழலைத் தந்தமையால், குளிந்த நிழல்
 தருவது அன்று - என்ற இப்பாடலில் சோழனுடைய குடைநிழலின் தண்மைப்பண்பு
 நீங்கிவிட்டது; அந்நிழல் வெம்மை தருவதும் ஆயிற்து என்ற கருத்து குண
 ஒழிப்பணியாமாறு காண்க.]