இனிச் சோழன்மேல் செல்லுங்கால், கரம் - கை; இரவு - இரத்தல்; மாதர் -
திருடமந்தை; நலம் - செல்வம்; பயிறல் - பெருகுதல்; பொங்குதல் - மேம்படுதல்;
உதயம் - பொருள் வருவாய்; அழி - சக்கரம்; வெய்யோன் - விருப்பம் உடையோன்;
நெறி - ஒழுக்கம்.
[சூரியன் தன் சிவந்த கிரணங்களால் இரவைப் போக்கும்; தாமரை அழகிய
சிறப்பைப்பெற, மேல்நோக்கி வளரும் தோற்றத்தோடு வானவெளியில் சஞ்சரிக்கும்
- எனவும்,
ஆணைச் சக்கரத்தை உடைய சோழன் இவ்வுலகில் தன் சிவந்த கைகளால்
செய்யும் கொடைத்தொழிலால் இரத்தலை நீக்கி, திருமகளும் கலைமகளும் இவனைச்
சேர்தலான் சிறப்படைய, சான்றோர் வகுத்த நெறியில் செங்கோல் செலுத்துவான் -
எனவும் செம்மொழிச் சிலேடைப் பொருள் கொள்க. பங்கயமாதர் - செந்தாமரைத்
திருவும் வெண்டாமரைக் கலைமகளும்.]