தாமரை - தாவுகின்ற மரை; அரிமான் - சிங்கப்போத்து; இடர் - துன்பம்; உள்வாழ்தேம் - மனம் பொருந்திய நாடு; சிந்தல் - அழிதல்; நந்தல் - கேடு. (52)
[சோழனுடைய மனம் விரும்புமாறு பணிசெய்த நட்டோர் நாடுகள் - விளைநிலங்களில் எருதுகளும் குளங்களில் தாமரையும் அடையவும், குறைவற்ற நெற்சூடுகளை உழவர் தொகுப்பவும், மலர்களில் உள்ளிருக்கும் தேன்சிந்தும் வளம் மிக்குப் பொலியும்;
சோழனுடைய மனம் பகைமையால் கெடுமாறு பகைத்த மன்னர் நாடுகள் அசையாத விடத்தேர் என்ற முள்மரங்கள் செழித்து ஓங்கவும், மலைகளில் தாவுகின்ற மான்கன் புகலிடம் தேடிச் செல்லவும், சிங்கங்கள் திரிந்து துன்புறத்தவும், பண்டு மக்கள் விரும்பி வாழுமாறு அமைந்த தம் வளம் இழந்துவிடும் - எனப் பிரிமொழிச் சிலேடைப் பொருள்கொள்க.] 52
சிலேடை எழுவகையான் இயலுமாறு
672. ஒருவினை,1 பலவினை,2 முரண்வினை,3 நியமம்,4
நியம விலக்கு,5 விரோதம்,6 அவிரோதம்2
எனஎழு வகையினும் இயலும் என்ப.
இதுவும் மேலதற்கு ஒருசார் எய்தியது ஓர் இயல்பு வகுத்துக் கூறுகின்றது.
இ-ள் : ஒரு வினையான் வரும் சிலேடையும், பல வினையான் வரும் சிலேடையும், மாறுபட்ட வினையான் வரும் சிலேடையும், சிலேடித்தவற்றை நியமம் செய்யும் சிலேடையும், அந்நியமத்தை விலக்கும் சிலேடையும், முன்னர்ச் சிலேடித்தவற்றைப் பின்னர் விரோதிப்பச் சிலேடித்தலும், முன்னர்ச் சிலேடித்தவற்றைப் பின்னரும் விரோதியாமல் சிலேடித்தலும் என ஏழு கூறுபாட்டானும் நடக்கும் அவ்வலங்காரம் என்றவாறு. |
|
|