[இது சிறப்பணி எனவும் சிறப்புநிலையணி எனவும் கூறப்பெறும்.
இது சந்திராலோகம், குவலயானந்தம் இவற்றில் சிறிது வேறுபாட்டுடன்
விளக்கப்பட்டுள்ளது; பிற்சேர்க்கை காண்க.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 79
"செல்லும் சிறப்புத் தொழில்குணம் அங்கம் சிதைந்திடினும்
நல்ல பயன்பட நாட்டல்." - வீ. 173
"சாதி குணம் தொழில் பொருள் இடம் உறுப்பென்று
ஓதிய இருமூன் றினுமுறு குறைபட
ஏதுவின் அதற்கதற்கு இசைமேம் பாட்டால்
நீதிகொள் புலவர் நிகழ்த்துதல் விசேடம்." - மா. 184
"விசேடம் எனக்குறை விளம்பிய வற்றான்
மேன்மை படப்பொருள் விளக்கிய நெறியே." - தொ. வி. 359
"குணம் தொழில் பொருள்உடல் குலம்முத லாயின
எச்சங் காரண மாகஓர் பொருட்கு
மேம்பாடு தோன்ற விளம்பல் விசேடம்." - மு. வீ. பொ. 95
"நிலையின் றாதேசம் நிகழத் தொடுத்தல்
ஏற்றதோர் பொருள்பல் லிடங்களில் நிற்பக்
காட்டுதல் சிறிய காரியம் செய்வான்
தொடங்கிவேறு அருவினை தோற்றுதல் மூன்றா
நிகழ்வது சிறப்பு நிலையணி என்ப,"
"சிலகா ரணத்தில் ......... விசேடத்தைத் தேரஅறி
தலின்......நாமம்......சிறப்பு." - குவ. அ. 82]
குணக்குறை விசேடம் வருமாறு :
"கோட்டம் திருப்புருவம் கொள்ளா; அவர்செங்கோல்
கோட்டம் புரிந்த; கொடைச்சென்னி - நாட்டம்
சிவந்தன இல்லை; திருந்தார் கலிங்கம்
சிவந்தன, செந்தீத் தெற"