[கொடைத் தொழிலில் வல்ல சோழனுடைய புருவங்கள் வளையத் தொடங்க வில்லை; அதற்குள் பகைவருடைய செங்கோல் வளைந்துவிட்டது. சோழ மன்னனுடைய கண்கள் கோபத்தால் சிவக்கவில்லை. அதற்குள் பகை மன்னருடைய கலிங்கநாடுகள் சோழமன்னனுடைய வீரர்கள் எரிபரந்து எடுத்தமையால், தீயினால் தெறப்பட்டுச் சிவந்தன - என்ற இப்பாடலில்,
புருவத்திற்குக் கோபத்தால் வளைதலும், கண்களுக்குக் கோபத்தால் சிவத்தலும் ஆகிய குணங்கள் ஏற்படுவதன் முன்னமே, புருவம் வளைந்து கண் சிவந்து செய்ய வேண்டிய செயல் நிகழ்ந்து விட்டது என்ற செய்தி குணக்குறை விசேடமாயிற்று.]
தொழில்குறை விசேடம் வருமாறு :
"ஏங்கா, முகில்பொழியா, நாளும் புனல்தேங்கும்
பூங்கா விரிநாடன் போர்மதமா - நீங்கா,
வளைப்பட்ட காலணிகள்; மாறுஎதிர்ந்தார்க்கு அந்நாள்
தளைப்பட்ட, தாள்தா மரை"
என வரும்.
[இடியோசை கேட்காமலும் மேகம் மழை பெய்யாமலும் நாளும் புனல் முட்டின்றித் தேங்கிக் காணப்படும் பொலிவினை உடைய காவிரிபாயும் நாட்டு மன்னனாகிய சோழனுடைய போர் - யானைகள் காலில் அணியப்பட்ட சங்கிலிகள் நீக்கப்படவில்லை; அதற்குள் பகைமையால் எதிர்த்த மன்னருடைய கால்களாகிய தாமரைகள் விலங்கிடப்பட்டுவிட்டன - என்ற இப்பாடலில்,
யானைகளைக் கட்டுத்தறியிலிருந்து சங்கிலியை நீக்கிப் போருக்குப் புறப்படவிடும் தொழில் நிகழும் முன் அச்செயலின் பயனாகிய பகைவரைச் சிறைப்பிடித்தல் நிகழ்ந்தது எனவும், இடிஇடித்து மழை பெய்யாமலே அதன் பயனாகிய குறையாத நீர்ப்பெருக்கைச் சோணாடு காவிரியால் பெற்றுள்ளது எனவும் வந்தன தொழிற்குறை விசேடமாதல் காண்க.] |
|
|