310

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     சாதிக்குறை விசேடம் வருமாறு :

    "மேய நிரைபுரந்து, வெண்ணெய் தொடுவுண்ட
     மாயனார் மாறுஏற்று அமர்புரிந்தார்; - தூய
     பெருந்திருவும் பின்னும் கொடுத்துடைந்தார், விண்மேல்
     புரந்தானும் வானோரும் போல்"

 என வரும். தொடுவுண்டல் - தோண்டி எடுத்தல்; போல் - ஒப்பில்போலி.

     [பசுக்களை மேய்த்து வெண்ணெயைத் தோண்டித் தின்ற கண்ணன் இடைக்
 குலத்தவனாயினும், போரிடத்தொடங்கிய அளவில் இந்திரனும், அவன் பக்கல் பொருத
 தேவரும் புறமுதுகு காட்டிக் கண்ணன் வேட்டவாறு பாரிசாத மரத்தைக் கொடுத்துத்
 தோற்று ஓடினார்கள் - என்ற இப்பாடலில்,

     போர்த்திறம் அறியாத ஆயர்குலத்தைச் சேர்ந்த கண்ணன் தேவர்களையே
 வென்றான் என்ற செய்தி சாதிக்குறை விசேட மாதல் காண்க.
 ஒப்பில்போலி - உரையரைசச் சொல்]

     பொருட்குறை விசேடம் வருமாறு :

    "தொல்லை மறைதேர் துணைவன்பால், யாண்டுவரை,
     எல்லை இருநாழி நெற்கொண்டு, ஓர் - மெல்லியலாள்,
     ஓங்குஉலகில் வாழும் உயிர்அனைத்தும் ஊட்டுமால்,
     ஏங்குஒலிநீர்க் காஞ்சி யிடை"

 என வரும்.

     [வேதங்களால் ஆராயப்படும் சிவபெருமானிடத்தில் ஓராண்டளவும் இருநாழி
 நெல்லைப்பெற்று, அந்நெல்லினைக் கொண்டே, பார்வதியாகிய பெண் நீர்வளம்
 நிரம்பிய காஞ்சிமா நகரில் முப்பத்திரண்டு அறங்கள் செய்து உலகிலுள்ள
 உயிர்களை யெல்லாம் உணவூட்டிக் காத்தாள் - என்ற இப்பாடலில்,

     மிகக் குறைந்த அளவிற்றாய இருநாழி நெல்லால் உலகு முழுதும் இறைவி
 பாதுகாத்ததாகிய செயல் பொருட்குறை விசேடமாதல் காண்க.]