வைத்துச் சொல்லுவது ஒப்புமைக்கூட்டம் என்னும் அலங்காரமாம். அது புகழ்தற்கண்ணும் பழித்தற் கண்ணும் தோன்றும் என்றவாறு.
[இஃது உடனிலைச் சொல்லணி எனவும் ஒப்புமைக் குழுவணி எனவும் கூறுப்பெறும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 80
"உடனிலைச் சொல்நயந்து,
சொல்லும் குணமுதல் ஒத்த தொகுத்தல்." - வீ. 173
"தக்கதோர் பொருளினைச் சாற்றுழி அதுபோல்
மிக்கபல் பொருள்களை உடன்விளம் புதல்தான்
ஒப்புமைக் கூட்டம் எனஉரைத் தனரே." - மா. 128
"உயர்புகழ் பழியவற் றொடுமுறும் அதுவே." - மா. 129
"ஒப்புமைக் கூட்டம் ஒத்த குணத்தவை
செப்பித் தன்பொருள் தெரிவுறக் கூறலே." - தொ. வி. 356
"ஒருபொரு ளுரைக்குங் காலகத் தெண்ணிப்
பொருள்முத லானவை அவற்றின் மிகுபொருள்
உறவைத் தியம்புவது ஒப்புமைக் கூட்டம்."
- மு. வீ. பொ. 96
"புகழினும் பழிப்பினும் புலப்படும் அதுவே." - மு. வீ. பொ. 97
"புனைவுளி புனைவிலி பலவாப் பொதுவியல்பு
ஒன்றின் முடித்தல் ஒப்புமைக் கூட்டம்." - ச. 36
"இனமாம் புனைவுளிக் கேனும் புனைவிலிக் கேனும்உறு
வனவாம் தருமத்தின் ஒற்றுமை ஏய்ஒப் புமைக்குழுவே." - குவ. அ. 64]
புகழ் ஒப்புமைக் கூட்டம் வருமாறு :
"பூண்தாங்கு கொங்கை பொரவே குழைபொருப்பும்,
தூண்டாத தெய்வச் சுடர்விளக்கும், - நாண்தாங்கு
வண்மைசால் சான்றவரும், காஞ்சி வளம்பதியின்
உண்மையான், உண்டுஇவ் வுலகு"
|
|
|