அணியியல் - ஒப்புமைக் கூட்டவணி

313 

     [காஞ்சியம்பதியிலே, அணிகலன்களை அணிந்த பார்வதி தேவியினுடைய
 கொங்கைகள் தழுவுதலால் குழைந்த மலைபோன்ற சிவபெருமானும், என்றும்
 தூண்டப்படாமல் தெய்விகச் சுடர்வீசும் விளக்குப்போன்ற திருமாலும், தவறான
 செயல்கள செய்தற்கண் உள்ளம் மடங்கும் இயல்பினராய் வள்ளன்மை மிக்க
 சான்றோர்களும் இருப்பதனால் உலகியல் தடையின்றி நிலைபெறுகிறது - என்ற
 இப்பாடலில்,

     உயர்ந்த பொருள்களாகிய சிவபெருமாள், திருமால், சான்றோர் என்பார் புகழ்பற்றி
 உடன் எண்ணப்பட்டவாறு.]

     பழிப்பு ஒப்புமைக்கூட்டம் வருமாறு :

    "கொள்பொருள் வெஃகிக் குடிஅலைக்கும் வேந்தனும்,
     உள்பொருள் சொல்லாச் சலம்மொழி மாந்தரும்,
     இல்இருந்து எல்லை கடப்பாளும், இம்மூவர்
     வல்லே மழைஅறுக்கும் கோள்"

 என வரும். பிறவும் அன்ன.                                           (55) 

     [தான் இறையாகக் கொள்ளவேண்டிய பொருளைப் பெரிதும் விரும்பிக்
 குடிமக்களைத் துன்புறுத்தி வரி வாங்கும் அரசனும், உண்மையை விடுத்து
 வஞ்சனையாகிய சொற்களையே பேசும் கீழ் மக்களும், இல்லறம் நடத்தும்
 இல்லாளாய் இருந்தும் தன் வரையறையைக் கடக்கும் தீயமகளும் ஆகிய
 இம்மூவரும் நாட்டில் தவறாது பெய்யும் பருவ மழையைக் குறைக்கும் தீய
 கோள்களாவர் - என்ற இப்பாடலில்,

     கொடுங்கோல் வேந்தன், சலம்மொழி மாந்தர், எல்லை கடக்கும் இல்லாள் என்ற
 தாழ்ந்தபொருள்கள் பழித்தல் பற்றி உடன் எண்ணப்பட்டவாறு காண்க.]

விரோதவணி

 675. மாறுபடு சொல்பொருள் மாறுபாட்டு இயற்கை
      விளைவுதர உரைப்பது விரோதம் ஆகும்.