318

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [மாதே! இவ்வழகிய மாதவிக்கொடி அரும்புகளையும் தளிர்களையும் கொண்டு
 மணம் வீசி மாமரத்தின் கிளையினைத் தழுவிக் கவர்ச்சியாகத் தோற்றம்
 அளிப்பதற்குப் பண்டைப பிறப்பில் பலவாகிய தவங்கள் செய்தது போலும் ! - என்று
 வரைதல் வேட்கையான் தோழியிடம் கூறிய தலைவி கூற்றாக அமையும் இப்பாடலில்,

     உயர்குடி மகளாய்ப் பிறந்து வைத்தும், தலைவனைப் பலர் அறிய மணம்
 புணர்ந்து பூப்புனைந்து அவனைத் தழுவி வாழும் இல்லறத்தை நல்லறமாக நடத்தும்
 வாய்ப்பிற்குரிய நற்றவத்தைத் தலைவி செய்யாமைக்காக இரங்கும் செய்தி குறிப்பால்
  பெறப்பட்டவாறு.

    "பூரித் தெழுந்த புணர்முலையைப் புல்லிவிடா
     வாரித் தரள வடம்நிரைதான் - நேரிழாய்!
     மட்டார் பொழில்வண் பரிசார மாதவர்க்காட்
     பட்டா தரித்தனவோ பண்டு"


  என்ற தலைவன் கூற்றாக அமைந்த மாறன் அலங்கார எடுத்துக் காட்டுப் பாடலையும்
 நோக்குக.- மா. 230]                                                  57 

புகழாப் புகழ்ச்சியணி

 677. பழிப்பது போலும் பான்மையின் மேன்மை
     புலப்பட மொழிவது புகழாப் புகழ்ச்சி".

     இது நிறுத்தமுறையானே புகழாப்புகழ்ச்சி அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   பழித்தல் போலும் பாகுபாட்டான் ஒன்றற்கு மேம்பாடு
 தோன்ற உரைப்பது புகழப் புகழ்ச்சி என்னும் அலங்காரமாம் என்றவாறு.

     [இது நிந்தாத்துதியணி யெனவும் புகழ் மாற்றணி யெனவும் வஞ்சப்புகழ்ச்சியணி
 யெனவும் நுவலாச்சொல் கூறப்படும்.