34

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

விளக்கம்

     செய்யுட்களை முத்தகம், குளகம் என்ற இருவகையாகப் பிரிக்கலாம்.
 தொகைநிலைச் செய்யுட்கள் முத்தகச் செய்யுட்களாகவே அமையும். தொடர்நிலைச்
 செய்யுட்கள் முத்தகம், குளகம் என்ற இருவகைச் செய்யுளானும் அமையும் என்பதும்
 அறிக.

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 2

    "யாப்பை இயம்பிடில் முத்தகத் தோடு குளகம்தொகை
     காப்பியமாம்"

- வீ. 178 

    "ஆற்றல் அணிக்கண் அவைமுத் தகம்குளகம்
     தோற்றும் தொகையே தொடர்நிலையென் - றேற்புடைய"

- மா. 67 

    "தொகைநிலை குளகம்முத் தகம்தொடர் நிலையென
     செய்யுள்நால் வகைப்படும் செப்புங் காலே"

- மு. வீ. செய்யுளணி 1 

முத்தகச் செய்யுள்

 623. அவற்றுள்,
      முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும்.

     இது, முத்தகச் செய்யுளது இயல்பு கூறுகின்றது.

     இ-ள்: மேல் கூறிய நால்வகைச் செய்யுளுள் முத்தகச் செய்யுள் என்பது
 தனியே நின்று பொருள் பயந்து முற்றுப்பெறும் என்றவாறு.