344

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     அவற்றுள், முதலடி ஆதிமடக்கு வருமாறு :

    "துறைவா துறைவார் பொழில்துணைவர் நீங்க
     உறைவார்க்கும் உண்டாங்கொல் சேவல் - சிறைவாங்கிப்
     பேடைக் குருகுஆரப் புல்லும் பிறங்குஇருள்வா
     வாடைக்கு உருகா மனம்"

 என வரும்.

     [நெய்தல்நிலத் தலைவனே ! துறைக்கண் நேரிதாக அமைந்த பொழிலிடத்துத்
 துணைவர் பிரிகையினாலே, சேவல் தன் பெடையைச் சிறகுகளால் ஆரப் புல்லும்
 இருளிடத்து, வாடைக்கு உருகாத மனம், அப்பிரியப்பட்ட மகளிருக்கும் உண்டோ?
 - என்று தோழி கூறியது.

     துறைவா - நெய்தல் நிலத் தலைவனே.
     துறை வார் - நீர்த்துறைக்கண் நேரிதான.
     இது முதலடி முதல் மடக்கு ஆமாறு காண்க.]

     இரண்டாம் அடி ஆதிமடக்கு வருமாறு :

    "கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கில்
     இனியார் இனியார் எமக்குப் - பனிநாள்
     இருவராய்த் தாங்கும் உயிர்இன்றி எங்குஉண்டு
     ஒருவராய்த் தாங்கும் உயிர்"

 என வரும்.

     [காவல ! கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினை உடைய இவள் தனித்திருக்க
 நீ பிரிந்து செல்லாயாயின், எங்களுக்கு இனிமேல் யார் இன்சொற்போசி
 மகிழ்விப்பார்கள்? பனிக் காலத்துக் கூடியவராகிய தலைவன் தலைவியராகிய இருவரும்
 தாங்கும் உயிரே அல்லாமல், பிரிந்து ஒருவராய் இருந்து தாங்கும் உயிரும் உண்டோ?
 - என்று தோழி தலைவன் பிரிவைத் தடுத்தது.

     இனி யார்-இனிமேல் யாவர்.
     இனியார்-இனிமை தருபவராயிருப்பார்.
     இஃது இரண்டாமடி முதல்மடக்கு ஆமாறு.]