360

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     திருவடி மலர்வன திகழ்ஒளிச் சிலம்பே
         தெளிவுடன் உறைவது திருமறைச் சிலம்பே
     இருவினை கடிபவர் அடைபதத் தனன்றே
         இமையவர் புகல்அவன் எனநினைத் தனன்றே"

 என வரும்.

     [நன்மை வளரும் வேதம் பலகாலும் குற்றமறப் பணியவும் சடைமுடியில்
 பிறையோடு பொருந்திய கங்கையை அணிந்து, அழகு பெற்ற மன்றத்தில் அரிய
 நடனம்புரிந்து அழகுகொண்ட காளையை அருளோடு செலுத்தி, திருவடிகளில் ஒளி
 திகழும் சிலம்புகள் விளங்கப்பெற்று, அழகிய வேதமயமான கயிலைமலையில்
 தெளிவோடு உறைந்து இருவினைகளையும் போக்கிக்கொள்வார் அடையும்
 திருவடிகளையுடையவன் சிவபெருமான் அல்லனோ? தேவர்களுக்கும் அவனே
 புகலிடமாவான் என்று நினைப்பது நன்று.

     இப்பாடலில் மறை பணிந்து - அப்பு அணிந்து, அழகுபெற்ற மன்றே -
 அணிகொள் பெற்றம் அன்றே, ஒளிச்சிலம்பு (அணி) - மறைச்சிலம்பு (மலை), பதத்தன்
 அன்றே - நினைத்தல் நன்றே - என்று மடக்குகளுக்குப் பொருள் செய்க.

     இந்நாலடிப் பாடலில் நான்காம் சீரும் எட்டாம் சீரும் அடிதோறும்
 இடையிட்டுவந்து மடக்கவே, இப்பாடல் முற்று மடக்காதல் காண்க.

     நான்கடியும் முதற்சீர் ஒழித்து மடக்கிய முற்று மடக்கு வருமாறு:

    "அனைய காவலர் காவலர் காவலர்
     இனைய மாலைய மாலைய மாலைய
     எனைய வாவிய வாவிய வாவிய
     இனைய மாதர மாதர மாதரம்.

 என வரும். பிறவும் வரும் வேறுபாடுகளும் அறிந்து கொள்க.                 (68)