அணியியல் - சொல்லணி - மடக்கு

365 

     இதன்கண் மூன்றாமடியும் நான்காமடியும் மடக்கியது காண்க.]

    "நலத்தகை பெறஇரு சரணம் ஓதுநம்
     குலத்தகை பகொளே காம்ப ரத்தனே
     நலத்தகை மகளொரு பாகம் நண்ணுமே
     குலத்தகை பணிகொளே காம்ப ரத்தனே."

     இஃது இரண்டாம் அடியும் ஈற்றடியும் மடக்கியது.

     [மேம்பட்ட நலம் பெறத் திருவடிகள் இரண்டனையும் பரவிப் புகழும் அடியார்
 குலத்தவர் கைகளைத் தன் குற்றேவலுக்கு ஏற்பித்துக்கொள்ளும் காஞ்சிமாநகரத்து
 ஏகாம்பரநாதன், நன்மைமிக்க பார்வதியை ஒருபாகமாகக் கொண்டு, குலத்தான் மேம்பட்ட
 பாம்புகளைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒற்றை ஆடையை உடையவன்.

     பணி - தொண்டு, பாம்பு.

     ஏகாம்பரம் - ஒற்றை மாமரம், ஒற்றை ஆடை.

     இதன்கண் இரண்டாம் அடி நான்காம் அடியாக மடக்கியவாறு காண்க.]

    "கருமாலை தொறுகாதல் கழியாது தொழுதாலும்
     உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
     உருமாய மதனாக மடுமாறு புரிவார்முன்
     வருமாய வினைதீர ஒருநாளும் அருளார்கொல்."

     இஃது இடை ஈரடி மடக்கியது.

     [உருவமே மறையுமாறு மன்மதன் உடலை அழிக்கும் செயலை விரும்பிய
 சிவபெருமானை முன்னர்ப் பிறவித் தொடர்ச்சி தோறும் அன்பு நீங்காது தொழுதாலும்,
 இடிபோன்று பிளிறி வரும் மதம் பொருந்திய யானையைக் கொல்லும் தொழில் புரிந்த
 அப்பெருமான் தொன்றுதொட்டு வரும் மாயமான கொடிய வினைகள்
 தீருமாறு ஒருகாலத்தும் அருள் புரியாரோ?