அணியியல் - சொல்லணி - மடக்கு

373 

    "கயலேர் பெறவருங் கடிபுனற் காவிரி
     காவிரி மலருகக் கரைபொரு மரவ
     மரவப் பூஞ்சினை வண்டொடு சிலம்பும்
     சிலம்புசூழ் தளிரடித் திருமனைக் கயலே"

 எனவும் வரும். பிறவும் அன்ன.                                         (69)

     [கயல்மீன்கள் எழுச்சிபெற பெருக்கெடுத்துவரும் நறுமணம் மிக்க புனலை உடைய
 காவிரியாறு, சோலைகளில் விரிந்த மலர்கள் கீழே விழுமாறு கரையைத் தாக்கும்
 ஒலியானது, மரவமரத்தில் பூக்கள் செறிந்த கிளைகளில் உள்ள வண்டொலியோடு
 ஒலிக்கும். இங்ஙனம் ஒலிக்குமிடம் சிலம்பு என்ற அணிகளால் சூழப்பட்ட தளிர்
 போன்ற அடிகளையுடைய தலைவியின் வீட்டிற்கு அருகிலேயாம்.

     கயல் ஏர்பெற வரும் கடிபுனல் கா விரி, கா விர மலர் உகக் கரை பொரும்
 அரவம், மரவம் பூஞ்சினை வண்டொடு சிலம்பும், தலைவி திருமனைக்கு அயலே
 - என்று பிரித்துப் பொருள் செய்க.

     இஃது அந்தாதி மடக்காமாறு காண்க.]                                69

     ஓரெழுத்துமடக்கு

 689. ஓர்எழுத்து மடக்கலும் உரித்துஎன மொழிப.

     இஃது ஓரெழுத்தானும் மடக்கு வரும் என அதன் வேறுபாடு
 உணர்த்துதல் நுதலிற்று.

     இ-ள்:    எழுத்தின் கூட்டம் இடைபிறிது இன்றிச் சீரானும் அடியானும்
 மடக்குதலே அன்றிப் பெயர்த்தும் வேறுபொருள் தரின் ஓர் எழுத்தான் மடக்குவதும்
 அம் மடக்கிற்கு உரிமை உடைத்து என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.