382

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 

                 

     தலைவியது நலம் பாராட்டியது. இப்பாடல் ஒற்றெழுத்தே வாராது அமைந்தபெற்ற
காண்க. ]

     இங்ஙனம் கூறியமடக்கின் வேறுபாடுகள் எல்லாம் விரிந்த நூலுள்ளும் முன்னோர்
கூறிய இலக்கியங்களுள்ளும் ஆராய்ந்து அமைத்துக் கொள்க. (70)

மிறைக்கவி - இருபது

     690.  கோமூத் திரியே1 கூட சதுக்கம்2
          மாலை மாற்றே3 மாத்திரைச் சுருக்கம்4
          மாத்திரை வருத்தனம்5 எழுத்து வருத்தனம்6
          ஒற்றுப் பெயர்த்தல்7 வினாஉத் தரமே 8
          நாக பந்தம்9 முரச பந்தம்10
          திரிபாகி11 திரிபங்கி12 பிறிதுபடு பாட்டு13
          காதை காப்பே14 காந்துறைச் செய்யுள்15
          சக்கரம்16 சுழிகுளம்17 சருப்பதோ பத்திரம்18
          அக்கரச் சுதகம்19 நிரோட்டம்20 என்ன
          முறைபெற வகுத்த மிறைக்கவி இருபதும்
          அறிவுறக் கிளந்த அவற்றின் பால.

     நிறுத்த முறையானே இது மிறைக்கவியின் பெயரும் முறையும் தொகையும்
கூறுகின்றது.

     இ-ள் : கோமூத்திரி முதல் நிரோட்டகம் ஈறாகச் சொல்லப்பட்ட இத்தன்மையவாய்
முறைமைப்படப் பகுத்த மிறைக்கவி இருபதும் முன்னர் எடுத்து ஓதப்பட்ட அம்மடக்கின்
பகுதியவாம் என்றவாறு.

     மிறைக்கவி எனினும் சித்திரகவி எனினும் ஒக்கும்.