384

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 

1. கோமூத்திரி

கோமூத்திரி என்பது நான்கடிச் செய்யுளை இரண்டு இரண்டு வரியாக எழுதி, மேலும் கீழும் ஒன்று இடை விட்டு வாசிக்க, அப்பாட்டேயாவது.

வரலாறு :

          ‘பருவ மாக விதோகன மாலையே
          பொருவி லாவுழை மேவன கானமே
          மருவு மாசை விடாகன மாலையே
          வெருவ லாயிழை பூவணி காலமே’

என வரும்.

[ ஆயிழை ! அஞ்சாதே ! இது அவர் குறித்த பருவம் ஆதல் வேண்டும் ; செறிந்த
மாலைப் பொழுதில் மேகக் கூட்டங்கள் திக்குக்களெல்லாம் பொருந்தி மழைபெய்தல்
ஒழியா ; ஒப்பற்ற மான்கள் காடுகளில் தாவித்திரிகின்றன ; தலைவர் மீண்டுவந்து
நன்மைப் பூவணியால் ஒப்பனை செய்யும் காலம் இதுவாகும் -- என்று பருவ
வரலின்கண் தோழி தலைவன் கடிதின் வருவான் என்று தலைவியை ஆற்றுவித்தவாறு.

ஆயிழை ! வெருவல் ; கன மாலையில் கனம் மாலை ஆசை (திசை) விடாது மருவும் ;
பொருஇலா உழை கானம் மேவன ; ஆதலின் இது பருவம் ஆக, அவர் பூஅணி காலம்
-- என்று பொருள் செய்க.

ஆனேறு நடந்துகொண்டே சிறுநீர் கழிக்குங்கால் அந்நீர் நேர்கோடாக விழாமல்
வளைந்து விழுவது போலப் பாடலை எழுதி, அம்முறையே மீண்டு வாசிக்கவும் பழைய
பாடலே அமையுமாறு பாடப்படும் சித்திரக்கவி இது.

‘கோமூத் திரநடை பெறல்கோ மூத்திரி’ - மா. 294 ]