396

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

    "தெரிவருங் காதலின் சேர்ந்தோர் விழையும்
     பரிசு கொண்டு வரிஅளி பாட
     மருவரு வல்லிஇடை உடைத்தாய்த் திரிதரும்
     காமர் மயிலியல் ஆயம் நண்ணாத்
     தேமொழி அரிவைதன் நேர்எனல்
     ஆம்இயற்று ஐய யாம்ஆடு இடமே."

 என ஈற்று அயலடி முச்சீராய் ஏனைய நாற்சீராய் நேரிசை ஆசிரியப்பா
 ஆயினவாறு கண்டுகொள்க.

     [தலைவியிடத்து ஆசையால் ஈண்டுப்போந்த யாம் விரும்பும் தன்மைகளைக்
 கொண்டு, வண்டுபாட, இடைபோன்ற கொடிகள் நுடங்க, ஆயத்தாரோடு கூட இன்று
 வாராத தலைவிக்கு ஒப்பாக அவளோடு நாம் விளையாடும் இடம் காட்சி
 வழங்குகிறது - என்று தலைவன் நெஞ்சொடு கூறியவாறு.]

14. காதை கரப்பு

     காதை கரப்பு என்பது ஒருசெய்யுள் முடிய எழுதி, அதன் ஈற்று மொழியுள்
 முதலெழுத்துத் தொடங்கி ஓரோர் எழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிது ஒரு
 செய்யுளாகப் பாடுவது.

    ["காதை கரப்பது காதை கரப்பே"                            - மா. 289 

    "யாப்பிறு மொழிமுதல் அக்கரம் தொடங்கி
     ஒவ்வொ ரெழுத்திடை ஒழித்துவா சிக்க
     வேறொரு செய்யுள் விளைப்பது காதை
     கரப்பாம் என்மனார் கற்றுணர்ந் தோரே."             - மு. வீ. சொ. 13 

     மாறன் அலங்காரம் காதை கரப்பையும் கரந்துறை செய்யுளையும்
 மாற்றிக் கூறும்.]