மேல் நின்று கீழ் இழிய நான்கு அடியும் எழுதி, அதனைக் கீழ் நின்று மேல் ஏற நான்கடியும் எழுதி, மேல் நின்று கீழ் இழியவும் கீழ் நின்று மேல் ஏறவும் விலங்கி, முதல தொடங்கி இறுதியாகவும் இறதி தொடங்கி முதலாகவும் மாலைமாற்றாகவும் நான்கு முகத்தாலும் வாசிக்க அச்செய்யுளேயாவது.
"இருதிறத்து எழுதலும் எண்ணான்கு எழுத்துடை
ஒரு செய்யுள் எண்ணென் அரங்கினுள் ஒருங்கமைந்து
ஈரிரு முகத்தினும் மாலை மாற்றாய்ச்
சார்தரும் மாறியும் சருப்பதோ பத்திரம்." - மா. 292]
வரலாறு :
"மாவா நீதா தாநீ வாமா
வாயய வாமே மேவா யாவா
நீவா ராமா மாரா வாநீ
தாமே மாரா ராமா மேதா"
என வரும். இஃது அவ்வாறாதல் கண்டுகொள்க.
[மேலோய் ! நீ கொடையாளி ! நீவாத செல்வமுடையாய் ! என்னாகக் கடவது? வா ; பொருந்துவாயாக ; நீ வந்தால் எனக்கு மேவாதன யாவை? நீ வா. இராமா ! மாரா ! நீதியோய் ! நீ அணிந்துள்ள ஆத்தி மாலையையே தா.
மாவா, நீ தாதா ; நீவா மாவா ; யா ; வா ; மே ; மேவா யா ; நீவா, வா; ராமா, மாரா, நீதா, மே(வு)ம் ஆர் ஆர(£)மாம் தா வா - என்று பொருள் செய்க.
அரசன் மாளிகைக்கண் உள்ள சருப்பதோபத்திரம் என்ற கட்டிடம் நாற்புறமும் வாயில் உடையதாய் நினைத்த பக்கத்தில் மேல் ஏறவும் கீழ் இறங்கவும் கூடியதாயிருப்பது போல, இப்பாடலும் எப்படிப் படித்தாலும் பாடல் அமையுமாறு அமைந்திருத்தல் காண்க.] |