அணியியல் - பொது

41 

    "சொல்லால் பொருளால் தொடரும் தொடர்நிலைகள்
     எல்லாம் அவற்றுள் எழுத்தசைசீர் - மல்கும்
     அடிசொற் றொடர்நிலைகள் அந்தம் முதலாம்
     படிவைத் தனர்முன் பகுத்து."

- மா. 70 

     "சொற்பொருள் இருவகை தொடர்நிலை எனலே"

- மு. வீ. செய்யுளணி 6 

பொருட்டொடர் நிலை 

 627. அவற்றுள்,
      பெருங்காப் பியமே காப்பியம் என்றுஆங்கு
      இரண்டா இயலும் பொருள்தொடர் நிலையே.

     இது பொருள் தொடர்நிலை இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் :   மேற்கூறிய இரண்டனுள் பொருள் தொடர்நிலைச் செய்யுள்
 பெருங்காப்பியமும் காப்பியமும் என இரண்டு வகைப்படும் என்றவாறு.

     கவியால் பாடப்படுவன எல்லாம் காப்பியம் ஆமேனும், தொடர்நிலைச்
 செய்யுளையே காப்பியம் என்றது, சேற்றுள் தோன்றுவன எல்லாம் பங்கயம் ஆமேனும்,
 தாமரையினையே பங்கயம் என்றாற்போல என்று உணர்க.

     "இயலும்" என்ற மிகையானே, முற்கூறிய முத்தகம் முதலிய மூன்றும் இதற்கு
 உறுப்பாய் வரும் எனக் கொள்க.                                        (8)