[தன் மேற்புறம் மேக மண்டலத்தால் மூடப்பட்டு, உள்ளே மகரந்தங்கள்
பரவச்செய்து, தேவர்களுக்கும் தன் வனப்பு மிகுதியால் மயக்கத்தையும் கொடுத்து
அசோக மரத்தினுடைய நெருப்பை ஒத்த பூங்கொத்துக்களை உடைத்தாய் வண்டுகள்
சூழ்ந்து திரியும் சோலைக்குள் யாரும் புகமாட்டார்கள் -- என்ற இப்பாடலில், அரி
என்ற சொல் சிங்கம், நெருப்பு, வண்டு முதலிய பல பொருளுக்கும் ஏற்றதாய்ப்
பொருள்மயக்கம் தருதலின் இங்ஙனம் கூறுதல் வழு என்பது.
தேவர்கள் அடிவணங்கி இட்டபணிகளை முட்டின்றிச் செய்ய, அவர்களுக்கு
பகைவர்களான அசுரர் கூட்டங்களை அழித்த மேம்பாட்டை உடைய திருமாலே
எல்லா உலகங்களையும் காக்கும் கடவுளாவான் ; அக்கினியே அந்தணருக்குத்
தெய்வமாவான் -- என்ற இப்பாடலில், அரி என்ற சொல் மயக்கமின்றித்
திருமாலையே உணர்த்துவதால், இஃது அமைதியாமாறு காண்க.] 77