416

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் திசைகளைக் காப்பவராய் எவரும்
 புகழத்தக்க இயல்பினராய் நிற்பவர் சந்திரனும் வருணனும் சூரியனும் எமனும்
 என்பவராவர் - என்ற இப்பாடலில், தெற்கில் சந்திரனும், மேற்கில் வருணனும்
 வடக்கில் சூரியனும் கிழக்கில் எமனும், உலகைக் காக்கின்றனர் என்ற கருத்து
 அமைதலின், பொருந்தாத நிரல் நிறை வழு ஏற்பட்டுள்ளது. தெற்கில் எமனும்,
 மேற்கில் வருணனும் வடக்கில் சந்திரனும் கிழக்கில் சூரியனும் என்று
 கொள்ளவேண்டிய முறை அமையின் நிரல் நிறை அணி ஆகும். எண்டிசை
 காப்போர் பற்றிப் பல கருத்துக்கள் உள போலும், வடக்கிற்குக் குபேரனும் கிழக்கிற்கு
 இந்திரனும் கூறப்படுதலே பெரும்பான்மையான வழக்காகும்.

     மேற்கு வடக்கு கிழக்கு தெற்கு என்ற திசை நான்கனுள்ளும் இடையிலுள்ள
 வடக்குக் கிழக்கும் நற்கருமம் புரிவோர் விரும்பிச் கொள்ளும் திசைகளாம்.
 ஏனையவாகிய மேற்கும் தெற்கும் தீக்கருமம் செய்வோருக்கு உரிய- என்ற
 இப்பாடலில் நிரல் நிறை உய்த்துணர்ந்து கொள்ளுமாற்றால் செவ்வனே
 அமைந்தவாறு காண்க.]                                                78

சொல்வழுவும் அமைதியும்

 698. சொல்வழு என்பது சொல்லிலக் கணத்தொடு
     புல்லா ஆகிப் புகர்படு மொழி;அது
     வழக்காாறு ஆயின் வரைவுஇன்று ஆகும்.

 இதுவும் அது.

     இ-ள் : சொல்வழு என்று சொல்லப்படுவது, சொல்லிலக்கணத்தோடு மாறுபட்டு
 வழுவிவரும் சொற்களைப் புணர்ப்பதாம். அதுவே, உலகத்து அடிப்பட்டு வழங்கும்
 சொற்களாயின் வழு என்று நீக்குதல் இன்று என்றவாறு.