ஒத்த நூற்பாக்கள்
முதலடி - தண்டி 120, மாறன் 322.
வரலாறு :
"செங்கமலம் வாய்குவிய, தேங்குமுதல் கண்மலர,
எங்குநெடு வான்மீன் இனம் இமைப்பப், -- பொங்குஉதயத்து
ஓர்அழித் தேரோன் உகந்தான் ; மலர்ந்ததே
நீர்அழி சூழ்ந்த நிலம்"
என வரும் பொழுதின் மலைவும்,
"காதலர் வாரார் ; களிக்கும் மயிர்அகவ,
தாதுஅவிழ் பூங்குருத்தின் தண்பணையின் -- மீதே
தளவோ முகைநெகிழ, தண்கொன்றை பூப்ப,
இளவேனில் வந்தது இதோ"
என வரும் பருவமலைவும் முறையே காண்க. (84)
[தாமரை இதழ் குவியவும், தேன்பொருந்திய குமுதம் மலரவும், வானம் எங்கும் விண்மீன்கள் மின்னவும், கடல்சூழ்ந்த உலகம் ஒளிவீசும் தோற்றத்தை உடைய ஒற்றைச்சக்கரத்தேரை உடைய கதிரவன் விரும்பினானாக, கடல்சூழ்ந்த உலகம் மலர்ந்தது - என்ற இப்பாடலில், மாலைககாலத்திற்குரிய தாமரைகுவிதல், குமுதம் மலர்தல், விண்மீன்கள் தோன்றுதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, பின் சந்திரன் தோன்றினான் என்னாது சூரியன் தோன்றினான் என்று கூறுவது பொழுதுமலைவாயிற்று. இது சிறுபொழுது மலைவு.
களிக்கும் மயில்கள் அகவவும், மகரந்தம் வெளிப்படுகின்ற பூக்களை உடைய குருந்த மரத்தின் தண்ணிய கிளைகளின்மீது படர்ந்த முல்லை நெகிழவும் தண்ணிய கொன்றை பூப்பவும் இளவேனிற்காலம் இதோ வந்துவிட்டது ; ஆனால் தலைவர் வரவில்லையே - என்ற இப்பாடலில், மயில் அகவுதல், முல்லை முகை தோன்றுதல், கொன்றை பூத்தல் ஆகிய நிகழ்ச்சிகளைக்கூறிப் பின் கார்காலம் வந்தது என்னாது இளவேனில் வந்தது என்று குறிப்பிடுதல் பெரும்பொழுது மலைவு ஆமாறு காண்க.]84 |
|
|