428

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

உலகமலைவு

 705. உலகுஎனப் படுவதுஈண்டு ஒழுக்கின் மேற்று ; அவ்
     வொழுக்கநெறி பிறழ உரைப்பதுஅதன் மலைவே.

 இதுவும் அது.

     இ-ள் : உலகு என்று சொல்லப்படுவது, பல பொருள் உணர்த்துமேனும் ஈண்டு
 ஒழுக்கத்தின் மேலிடத்தாம் ; அவ்வுலகத்தின் ஒழுக்கநெறியை மாறு பட உரைப்பது
 உலகமலைவாம் என்றவாறு.

ஒத்த நூற்பாக்கள்

முதலடி - தண்டி 122, மாறன் 320.

     வரலாறு :

    "அலைகடல், ஏழும்தூர்த்து, அந்தரத்தின் ஊடே,
     மலைஅனைய மால்யானை ஓட்டிக் -- கலவாரை
     நீறாக்கி, வையம் நெடுங்குடையின் கீழ்வைத்தான்,
     மாறாச்சீர் மாநிலத்தார் மன்"

     என வரும். இதனூள், ஒருநில வேந்தனை எழு கடலும் தூர்த்தானாகவும்
 ஆகாயத்தே தன் யானையை ஓட்டிப் பகைவரை வென்றானாகவும் உலக ஒழுக்கோடு
 மாறுபடக் கூறினமையான், உலக மலைவு ஆயிற்று.                         (86)

     [அலையும் கடல் ஏழையும் ஆழம் நீங்கச்செய்து, வான வெளியில், மலையை
 ஒத்த, மத மயக்கம் பொருந்திய யாகைளைச் செலுத்திப், பகைவரைச் சாம்பராக்கி
 என்றும் கெடாத சிறப்பினை உடைய இந்நிலவுலகத்து மன்னன் உலகையே தன்
 ஒற்றைக் குடைக்கீழ்க் கொணர்ந்தான் - என்ற இப்பாடல், உலகியல் நடைபேற்றுக்கு
 மாறாகக் கடலைத்தூர்த்தல், வானத்தில் யானையைச் செலுத்துதல் முதலிய செயல்களை
 நிலஉலக அரசன் மேல் ஏற்றிக் கூறுதலின் உலக மலைவாயிற்று.]              86