இ-ள் : நியாயம் என்று சொல்லப்படுவது இலக்கண வகையான் கூறுங்கால் காண்டல் முதலாகிய அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களது முடிவின் கூறுபாடாம்; அவற்றை அவ்வவர் கூறியவாறு கூறாது மாறுபடக் கூறுவது அதன் மலைவ என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.
அளவைகளால் தெளிவித்து உரைக்கப்படும் பொருள்களாவன அறுவகைப்பட்ட சமயங்களின் முடிவாகிய பொருள்களின் தோற்றமும் நிலையும் அழிவும் இன்னவகைய என்ற கூறதல்.
ஒத்த நூற்பாக்கள்
முதல் ஈரடி - தணி 123, மாறன் 324.
வரலாறு :
"ஆய பொருள்கள் கணந்தோறு அழியும்எனத் தூய அசோகின் முனிஉரைத்தது -- ஆய்வுஅற்றோ? காதலர் நீங்க, எழும்காம வெங்கனல்வாய் மாதர் உயிர்தாங்க மாறு."
இதனுள் தோன்றும் பொருள்களெல்லாம் கணந்தோறும் அழியும் என்று போதியின் முனி உரைத்தான் எனற்பாலதனை அசோகின் முனி உரைத்தான் என்றமையான், நியாய மலைவு ஆயிற்று. ஒழிந்தனவும் வந்துழிக் காண்க. (87)