கூடம் விரவப் பாடல் குறைநிலத் தானத்ததாயிற்று எனினும், தலைவியிடத்து அவன் கொண்ட அன்பு அவள்பாடலை அமுதமாகப் பருகச் செய்தது என்பது.]
"கடல்நான்கும் வந்துஅலைக்கும் காலாளும் தேரும்
அடல்செய்து இருதுணியாம் அன்றே ; -- உடல்ஒன்றி
அந்தரமே ஏகுவன், காண்மினோ ; யான்இயற்றும்
இந்திர சாலம் இது."
இதனுள், கலைமலைவாய்ப் பொருள்வந்து, இந்திரசாலம் எனப் புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று. இது சம்பிரதம் எனினும் அமையும்.
[நாற்கடலளவும் பரந்துபட்ட காலாட்படையும் தேரும் ஒவ்வொன்றும் இவ்விரு துண்டமாக அழித்து உடலோடு தேவருலகத்துச் செல்லப் போகின்றேன் ; நான் செய்யும் இந்திர சாலமாகிய இதனைக் காண்மின் - என்று இந்திரசாலம் வல்லவன் கூறியது. இக்கருத்தமையும் பாடல் சம்பிரதம் என்ற பெயரோடு கலம்பகத்தின் ஒர் உறுப்பாக வரும்.]
"வானாகி மண்ணாய் மறிகடலாய் மாருதமாய்த்
தேனாகிப் பாலாம் திருமாலே! -- ஆன்ஆயா!
வெண்ணெய் விழுங்க நிறையுமோ, மேல்ஒருநாள்
மண்ணை உமிழ்ந்த வயிறு."
இதனுள், எல்லாப் பொருளும் ஆயினாய் என்றும், வெண்ணெயை விழுங்கினாய் என்றும், மண்ணை உமிழ்ந்தாய் என்றும் நியாய மலைவாய், புகழ்ச்சியிடத்து அலங்காரம் ஆயிற்று.
[வானமும், நிலமும், கடலும், காற்றும், தேனும் பாலுமாய் எனக்கு இன்பம் தரும் திருமாலே ! மாடுகளை மேய்த்த ஆயனே ! |
|
|